பாலியல் பலாத்கார விசாரணைக்கு பயந்து நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் நடிகை ரஞ்சிதாவும் சேர்ந்து தலைமறைவாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதியில், சுவாமி நித்யானந்தாவிற்கு ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்கு பக்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2010-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த விவகாரம் தொடர்பாக ராம்நகர் மாவட்ட கூடுதல் குற்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் நித்யானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியாகிவிட்டது. மேலும் விசாரணை நிறைவு பெறும் வகையில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கக்கூடாது என்று போலீசார் கூறியிருந்தனர். இந்த உத்தரவை பாஸ்போர்ட் அலுவலகமும் ஏற்றதாக தெரிகிறது. 

இந்நிலையில் பாலியல் வழக்கு தொடர்பாக, நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே நித்யானந்தா தலைமறைவாகியுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தன்னிடம் பாஸ்போர்ட் இல்லாததால் விமானம் மூலம் எங்கும் செல்ல இயலாது. ஆகையால் அவர் சாலை மார்க்கமாக நேபாளத்துக்கு சென்று இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.