புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் களத்தில் உள்ளது போன்ற பேனர் ஒன்று புதுச்சேரியில் வைக்கப்பட்டுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

புதுச்சேரியில் பேனர்கள் கலாச்சாரம் பெருகி வருகிறது. சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள் வைப்பது. இந்த பேனர்கள் காற்றில் கிழிந்து பறக்கும்போது, வாகனத்தில் செல்வோர் மீது விபத்து ஏற்பட்டுவது உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

ஆனாலும், இந்த பேனர் கலாச்சாரம் புதுச்சேரியில் குறைந்தபாடில்லை. பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கட்அவுட்டுகளும் வைக்கப்பட்டு வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ரங்கசாமியின் பிறந்த நாளை, அவரின் தொண்டர்கள் புதுப்பட ரிலீஸ் போல கொண்டாடுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால், இந்த பேனர்களில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தொடங்கி அனைத்து உலக தலைவர்களுடனும் ரங்கசாமி நெருக்கமாக இருப்பதுபோன்ற பேனர்கள், புதுச்சேரியின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், திரைப்பட நாயகர்கள், சாகச செயலில் ஈடுபடுவது போன்று, அதே வகையிலான பேனர்கள் வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாள் களைகட்டத் தொடங்கி உள்ளது. ரங்கசாமியின் பிறந்தநாள் பேனரில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுடன் டென்னிஸ் களத்தில் இருப்பதுபோன்ற பேனர் ஒன்று அவரின் ஆதரவாளர்களால் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பேனர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.