இந்தியாவில் கொரோனா பாதிப்பு 37 ஆயிரத்தை கடந்துவிட்டது. இதுவரை 1200க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு கடுமையாக உள்ளது. 

இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வராததால் கட்டாயத்தின் பேரில், மே 3க்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து அவர்களது கஷ்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுத்துவருகின்றன. 

ஊரடங்கால் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிமாநிலங்களில் படித்துவரும் மாணவர்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமல் தவித்துவந்தனர். இந்நிலையில், அவ்வாறு வெளிமாநிலங்களில் சிக்கி தவித்தவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், படிப்பதற்காக வெளிமாநிலங்களுக்கு சென்ற மாணவர்கள் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தங்களது மாநிலங்களுக்கு திருப்பி அழைத்துக்கொள்வது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாநிலங்கள் பேசி முடிவு செய்து, அந்த லிஸ்ட்டை தயார் செய்து கொடுத்தால், அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. 

எனவே அந்த ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட பல தரப்பினரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். அவ்வாறு வெளிமாநிலங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களுக்கு பரிசோதனை செய்து அவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

குடும்பத்தினரையும், உறவினர்களையும் விட்டு பிரிந்து வெளிமாநிலங்களில் சிக்கி தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டு அவர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்ப நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடிக்கு ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

கொரோனா விழிப்புணர்வு, ஊரடங்கின் அவசியம், மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து தொடர்ச்சியாக தனது கருத்தை டுவிட்டரில் பகிர்ந்துவரும் ராஜீவ் சந்திரசேகர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்ப பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு திருப்பியனுப்ப பிரதமர் மோடி கடும் முயற்சி எடுத்து அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் உலகிலேயே மிகப்பெரிய மக்கள் கூட்டத்தின் நகர்வு இதுதான். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் சொந்த ஊருக்கு திரும்ப பிரார்த்திக்கிறேன் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.