மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. காங்கிரசின் சைலேஷ் மனுபாய் பரமர் என்பவரின் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக குஜராத் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த அனுமதித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டிருந்தது. நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் உள்ளது போல, மாநிலங்களவைத் தேர்தலிலும் ‘நோட்டா’வை  அறிமுகப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்பதை தெரிவிக்கும் ‘நோட்டா’ ஓட்டுச்சீட்டில் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியானது. இவ்விவகாரத்தால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷைலேஷ் மனுபாய் பார்மர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை மேற்கொண்டது. 

அப்போது தலைமை நீதிபதி கூறிகையில் மாநிலங்களவைத் தேர்தலில் ஓர் உறுப்பினர் வாக்களிக்காவிட்டால், அவர் சார்ந்த கட்சி அவரை வெளியேற்றிவிடும். ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமாக, நீங்கள் வாக்களிக்காமல் இருக்கும் நடைமுறையை சட்டப்பூர்வமாக்கப் பார்க்கிறீர்கள் என்று கூறினார். 

மேலும் மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்துவதற்கு எதிராக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். ஆனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாநிலங்களவை தேர்தலில் நோட்டா மீண்டும் பயன்படுத்தப்பட்டது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றார். பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது மாநிலங்களவை தேர்தலில் நோட்டாவை பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.