rajnath singh says that he wont celebrate holi

நாடுமுழுவதும் இன்று வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், தான் கொண்டாடப் போவதில்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

சட்டீஸ்கர் மாநிலம், சுக்மாவில், மாவோயிஸ்ட்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில், துணை ராணுவப்படையினர் 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவம் நடந்த ராய்பூர் பகுதிக்கு விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், “ மாவோயிஸ்ட்களின் கோழைத்தனமான தாக்குதல். வீரர்களின் வீரமரணம் என்னை மிகவும் பாதிக்கிறது. வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.ஒரு கோடிக்கும் குறையாமல் நிவாரணம் அளிக்கப்படும் ’’ என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நாடுமுழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், ராணுவ வீரர்களின் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹோலி பண்டிகை கொண்டாடமாட்டார் என்று அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.