ராஜீவ்காந்தி கொலைக்கு பின் திட்டமிட்ட சதியா?
முழுமையான விசாரணை கோரி பிரதமர் மோடியிடம் மனு….
ராஜீவ் கொலைக்கு பின்னால் சதி திட்டம் உண்டா? என்பது குறித்து ஆய்வு செய்ய விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ராஜீவ் கொலை வழக்கில் சாட்சியளித்த ரமேஷ் டலால் பிரதமர் மோடிக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
ரமேஷ் டலால் ஜெயின் கமிஷன் முன்பு ஆஜராகி சாட்சியமளித்தவர். ஜெயின் கமிஷன் முன் சாட்சியளித்த பிறகு2016ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சிபிஐக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ராஜீவ்காந்தி கொலை குறித்து விரிவான விசாரணை தேவை என்று கோரி இருந்தார்.
இதைத்தொடர்ந்து 2016ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நான் எழுதிய கடிதத்துக்கு இன்னும் சிபிஐ பதில் தரவில்லை.
விரிவான விசாரணை தேவையா? என்பது குறித்து பதில் கூறும்படி சிபிஐக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலையிட்டு சுதந்திரமான விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டலால் தன்னுடைய மனுவில் கோரியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடந்த விசாரணையில் பல குறைபாடுகள் உள்ளன. எனவே மேலும் இந்த குறைபாடுகளைப் போக்க மேலும் விசாரணை தேவை என்று மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மெஹ்ரிஷி, சிபிஐ இயக்குனர் அனில் சின்கா ஆகியோர் கோரியுள்ளனர்.
ராஜீவ் கொலைக்கு அடிப்படையாக அமைந்த சதி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை தடா நீதிமன்றமும் 1991ம் ஆண்டிலேயே கோரியது. ஆனால் அந்த கோரிக்கையின்படி சிபிஐ விசாரணை நடைபெறவில்லை.
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பேரறிவாளன். அவர் சிபிஐ குழுவோ, பலமுனை கண்காணிப்பு ஏஜென்சியோ ராஜீவ் கொலைக்கு பின்னணியாக சதி உள்ளதா ? என்று ஆய்வு செய்யத் தவறிவிட்டன என்று கூறி உள்ளார்.
பலமுனை கண்காணிப்பு ஏஜென்சியில் சி.பி.ஐ., ‘ரா’, புலனாய்வு கழகம் மற்றும் சில மத்திய ஏஜென்சிகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.
ஜெயின் கமிஷன் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து இந்த பல்முனை கண்காணிப்பு ஏஜென்சி அமைக்கப்பட்டது.
ராஜீவ் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக சிபிஐ பல்முனை கண்காணிப்பு ஏஜென்சி பராமரித்த வழக்கு விசாரணை டயரிகளை தாக்கல் செய்யும்படி பேரறிவாளன் முன்பு கோரினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.
சிபிஐ மற்றும் பல்முனை கண்காணிப்பு ஏஜென்சியின் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றும் பேரறிவாளன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
