இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை தடுக்க அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதியுடன் முடிவடையவுள்ளது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசித்த பிரதமர் மோடி, நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

அந்த உரையில், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. தற்சார்பு பொருளாதாரம் குறித்த அறிவிப்பு தான் அது. அதுகுறித்து தனது உரையில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடங்கியபோது நம்மிடம் பிபிஏ கருவிகளே கிடையாது. ஆனால் தற்போது, ஒருநாளைக்கு 2 லட்சம் பிபிஏ கருவிகளை நாமே உற்பத்தி செய்கிறோம். உலகத்துக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை ஏற்றுகிறது. 

கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெறுவோம். தொடர்ந்து நாம் முன்னேறுவோம். யாரையும் சார்ந்திராமல் செயல்படுவது இந்த காலக்கட்டத்தில் நமக்கு மிகவும் அவசியம். கொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. எனவே சுயசார்பு இந்தியா திட்டத்திற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்படும். கொரோனாவை சமாளிக்க உள்நாட்டு உற்பத்தியே உதவி செய்தது. எனவே உள்நாட்டு உற்பத்தி, உள்நாட்டு விநியோகத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும். 

உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதற்கான திட்டம் தான் இது என்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் சுயசார்பு இந்தியா திட்டம், எதிர்கால இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டமைப்பதற்கான திட்டம். பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு வரவேற்புகள் குவிந்துவருகின்றன. 

இந்நிலையில், சுயசார்பு திட்டம், Protectionism-ஆக அமைந்து 1970களை போன்ற சூழல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் நௌஷாத் ஃபோர்ப்ஸ், இந்தியாவின் உடனடி தேவையை பூர்த்தி செய்வதற்கும், தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கும் பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு இந்தியா திட்டம் பலனளிக்கும். ஆனால் அதேவேளையில், சுயசார்பு இந்தியா என்று பேசுகையில் எனது கவலை என்னவென்றால், 1970ஐ போல சுயசார்பு பொருளாதாரம் என்பது Protectionism-டன் இணைந்ததாக இருந்துவிடக்கூடாது. அப்படியிருந்தால், 1970களில் தன்னிறைவு மனப்பான்மை கொண்ட அந்த நாட்களை போல, இப்போதைய சுயசார்பு இந்தியா திட்டம் இருக்கும்பட்சத்தில், நாம் பின்னோக்கித்தான் சொல்வோம் என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்தார். 

நௌஷாத் ஃபோர்ப்ஸின் இந்த கருத்துக்குத்தான் ராஜ்ய சபா எம்பி ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். அதற்கு முன் Protectionism என்றால் என்னவென்று பார்ப்போம்.

Protectionism:

Protectionism என்பது பாதுகாப்பு சார்ந்த பொருளாதார கொள்கை. அதாவது, வெளிநாட்டு உற்பத்தி பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான சுங்கவரியை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, இந்தியாவில் இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை கடுமையாக்குவது. அதனால் வெளிநாட்டு உற்பத்தி பொருட்களின் விலை உயரும். இந்திய உற்பத்தி நிறுவனங்களின் போட்டியாளர்களின் உற்பத்தியையும் அவர்களின் மார்க்கெட்டையும் தடுப்பது தான் Protectionism.

பிரதமரின் சுயசார்பு திட்டம், 1970களில் இருந்த Protectionism போல் இருந்துவிடக்கூடாது என்று ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளார். அதற்குத்தான் ராஜீவ் சந்திரசேகர் பதிலடி கொடுத்துள்ளார். 

நௌஷாத் ஃபோர்ப்ஸின் கருத்துக்கு பதிலளித்து ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டுள்ள டுவீட்டில், சுயசார்பு இந்தியா திட்டம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை, பாதுகாப்புவாதம்(Protectionism) அல்ல. இந்தியாவின் செயல்திறனை மேம்படுத்தி, உலக நாடுகளுடன் போட்டியிட்டு, அவர்களுக்கே உதவுவதுதான். பிரதமர் மோடியின் திட்டம், இந்தியாவின் ஆற்றலை திரட்டும் துடிப்பான, ஊக்கமுள்ள திட்டம் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

இந்தியா உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டிருப்பதால், இந்தியாவால் தன்போக்கில் உற்பத்தியில் ஈடுபட முடியாது. அதுகுறித்த முடிவுகளையும் எடுக்க முடியாது. சுயசார்பு திட்டம் என்பது இந்தியா தன்னை தனிமைப்படுத்தி கொள்ளும் திட்டமோ அல்லது அமைப்பிலிருந்து வெளியேறும் திட்டமோ கிடையாது. உலகநாடுகளுடன் போட்டியிட்டு உற்பத்தியை பெருக்கி, உலக நாடுகளுக்கே உதவுவதுதான். 

மேலும் இதுகுறித்து பதிவிட்டுள்ள ராஜீவ் சந்திரசேகர், ரூ.20 லட்சம் கோடி என்பது நாட்டின் பொருளாதாரத்தை காக்க மட்டுமல்ல. பொருளாதாரத்தில் புதிய சீர்திருத்தங்களை நவீனப்படுத்தவும், அனைத்துவிதமான பொருளாதார வாய்ப்புகளையும் பெருக்கிக்கொள்ளவும் தான் என்றும் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.