சபரிமலை கூட்டநெரிசலை கேரளாவின் பினராயி விஜயன் அரசு கையாளும் விதத்தை விமர்சித்ததுடன், ஐயப்ப பக்தர்களை நடத்துவது குறித்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கவலை தெரிவித்துள்ளார்
ஹமாஸ் முக்கியம், ஆனால் பல இந்துக்களின் நம்பிக்கை முக்கியம் அல்ல என்று சபரிமலை கூட்டநெரிசலை கேரளாவின் பினராயி விஜயன் அரசு கையாளும் விதத்தை விமர்சித்த மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் காட்டமாக விமர்சித்துள்ளதுடன், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் படும் இன்னல்களின் வீடியோக்களையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“மிகவும் புனிதமான இந்த மாதங்களில் சபரிமலைக்கு வரும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை அவமானகரமாக கையாள்கின்றனர். பினராயி விஜயனுக்கும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் ஹமாஸ் முக்கியம் ஆனால் பல இந்துக்களின் நம்பிக்கை ஒரு பொருட்டல்ல.” என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சபரிமலை யாத்ரீகர்கள் உணவு, தண்ணீர், அடிப்படை சுகாதாரம் கூட இல்லாமல் தவிப்பதாக பாஜக நிர்வாகி அனூப் ஆண்டனி என்பவர் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மண்டலம் மகரவிளக்கு பூஜையையொட்டி சமரிமலை ஐயப்பன் சன்னதிக்கு வரும் பக்தர்களுக்கு தண்ணீர், சிற்றுண்டி மற்றும் பிற வசதிகளை வழங்க வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு நேற்று முன் தினம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலைக்குச் செல்லும் குழந்தைகள் உட்பட பக்தர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக உணவு, தண்ணீர் கிடைக்காமல் தவிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அனில் கே நரேந்திரன் மற்றும் ஜி கிரீஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கூட்ட நிர்வாகத்தை மேற்பார்வையிடவும், தேவைப்பட்டால் கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் மாநில டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு, சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து பெருமளவில் வரும் பக்தர்கள் சபரிமலை செல்லும் பாதையில் சரியான ஏற்பாடுகள் இல்லாதது குறித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் நீண்ட பவுர்ணமி: குளிர் நிலவை இந்தியாவில் எப்போது பார்க்கலாம்?
இந்த ஆண்டு புனித யாத்திரை மேற்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 1.2 லட்சம் பேர் வருகை புரிந்ததாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. கடந்த 39 நாட்களில் மட்டும் ரூ.204.30 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளார். இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ.63.89 கோடியும், அரவணா பிரசாதம் விற்பனை மூலம் ரூ.96.32 கோடியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
