சமூகவலைதளங்களில் தன்னை பற்றி ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட இளைஞனை ரோட்டில் வைத்து இளம்பெண் சரமாரியாக அடித்து உதைத்த காட்சி வைரலாகி வருகிறது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் என்ற இடத்தில் வெளியூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேலைபார்த்து வந்தார். அவரை பார்த்ததும் காதலில் விழுந்த இளைஞன் ஒருவன், தனது காதலை இளம்பெண்ணிடம் கூறியுள்ளான். ஆனால், வேலைபார்த்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்த அந்த பெண், இளைஞனை கண்டுகொள்ளவில்லை. இளம்பெண் தன்னை புறக்கணித்தாலும், ஒருதலையாக அவரை காதலித்த இளைஞன், திருட்டுத்தனமாக செல்போனில் படம் எடுத்துள்ளான். 

அந்த படத்தை வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றில் பதிவிட்டு, அவர் தனது காதலி என கூறியுள்ளான். மேலும், இளம்பெண்ணுடம் பலமுறை டேட்டிங் சென்றுள்ளதாகவும் கூறியுள்ளான்.  இதை பார்த்த உள்ளூர் தோழிகள், இளம்பெண்ணிடம் விசயத்தை கூறியதும் ஆத்திரமடைந்த அவர், இளைஞனுக்கு உரிய பாடம் கற்பிக்க முடிவு செய்தார். எனவே, மரக்கட்டை ஒன்றை தயாராக வைத்துக் கொண்டு, இளைஞனின் வருகைக்காக காத்திருந்தார். இளைஞன் வந்ததும் மரக்கட்டையை தனக்கு பின்னால் மறைத்தவாறு நெருங்கிய அவர், நான் இங்கு கடுமையாக உழைக்க வந்துள்ளேன். ஆனால், நீயோ என்னை கேவலப்படுத்துகிறாய் என்று கூறியவாறே இளைஞனை தாக்கத் தொடங்கினார். இளம்பெண் தன்னை நெருங்கிய வந்தபோது, காதலைத்தான் கூற வருகிறார் என்று நினைத்த இளைஞனுக்கு, இளம்பெண் திடீரென தாக்கியதும் அதிர்ச்சியடைந்து அலறத் தொடங்கினார். இதையடுத்து, அங்கு வந்த பொதுமக்கள், இளைஞனை, அந்த இளம்பெண்ணிடம் இருந்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், “நீ என்ன டிரம்பின் மகன் என்று நினைப்பா? அப்படி டிரம்பின் மகனாகவே இருந்தாலும் எனக்கு கவலையில்லை. பெண்களிடம் நீ எல்லை மீறினால், நாங்கள் குரலை எழுப்புவோம்” என்று இந்தியில் கத்தியவாறே இளைஞனை சரமாரியாக தாக்கினார் அந்த இளம்பெண்.

அப்போது, அவரை தடுத்த பொதுமக்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளம்பெண், “என்னை பற்றி அவன் தவறாக பரப்பி வருகிறான். என்னை எல்லோரும் கேவலமாக பேசுகிறார்கள். என்னை படுக்கைக்கு சில இளைஞர்கள் கூப்பிடுகிறார்கள்” என்று கண்ணீர் வடித்தார். ”அவன் என்னைப் பற்றி தவறாக பதிவிட்டாலும், காவல்துறையிடம் நான் புகார் அளிக்காமல் இருந்ததற்கு காரணம், நானே அவனுக்கு பாடம் கற்றுக்கொடுக்க முடிவு செய்ததால்தான்” என்றும் அந்த இளம்பெண் கூறினார். இருப்பினும் தகவல் அறிந்த காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.