ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வாய்ப்புள்ளது. 

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆல்வார் மாவட்டத்திலுள்ள ராம்கார் தொகுதியில், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மாரடைப்பால் மரணமடைந்ததையடுத்து, அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. இதனையடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

இதில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கையின் ஓங்கியே இருந்தது. தற்போது வரை காங்கிரஸ் 101 இடங்களிலும், பாஜக 78 இடங்களில், பிஎஸ்பி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முதல்வர் வசுந்தரா ராஜே, காங்கிரசின் சச்சின் பைலட், அசோக் கெலாட் முன்னிலையில் உள்ளனர்.    

முன்னதாக எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளில் ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்காது இங்கு காங்கிரஸ் கையே ஓங்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.