ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா டிச.15இல் பதவியேற்பு!

ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா வருகிற 15ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்

Rajasthan cm designate Bhajan Lal Sharma to take oath on december 15 smp

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை மொத்தம் 200 தொகுதிகளை கொண்டது. வேட்பாளர் ஒருவரின் மறைவை அடுத்து 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று  முடிந்தது. அதில் பதிவான வாக்குகள் கடந்த 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேர்தலில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்ட நேற்று நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில், முதல்முறை எம்.எல்.ஏ.வான பஜன்லால் சிங் பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதாவது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அதேபோல், துணை முதல்வர்களாக தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், முன்னாள் அமைச்சர் வாசுதேவ் தேவ்நானி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா வருகிற 15ஆம் தேதி பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரான சிபி ஜோஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், “பஜன்லால் ஷர்மா முதல்வராகவும், தியா குமாரி மற்றும் பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதல்வர்களாகவும் டிசம்பர் 15ஆம் தேதி (நாளை மறுநாள்) பதவியேற்க உள்ளனர். ஜெய்ப்பூரின் ராம்நிவாஸ் பாக்கில் உள்ள ஆல்பர்ட் ஹாலில் பதவியேற்பு விழா நடைபெறும்.” என தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைக்குள் அத்துமீறியவர்கள் பயன்படுத்திய புகை கருவி: சண்டையிட்டு கொண்ட டிவி நிருபர்கள்!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 7ஆம் தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில், தெலங்கானா, மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸும், மிசோரமில் ஜோரம்  மக்கள் இயக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

தெலங்கானா முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டியும், மிசோரம் முதல்வராக ஜோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமாவும் ஏற்கனவே பதவியேற்று விட்டனர். பாஜக முதல்வர்கள் அறிவிப்பில் தாமதம் நிலவி வந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவும், சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தியோ சாய் ஆகியோர் இன்று பதவியேற்றுள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios