ராஜஸ்தானில் பலத்த காற்று காரணமாக பந்தல் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது.  

ராஜஸ்தான் மாநிலம் பாமர் மாவட்டத்தில் உள்ள ஜசோல் பகுதியில், ‘ராம் கதா’ என்ற ஆன்மிக நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டு அதன் மீது சாமியானா பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது, திடீரென பலத்த காற்று வீசியது. இதில் இரும்புத் தூண்கள் சரிந்து விழுந்தன. இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் 5 லட்சம் நிதிஉதவி அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.