Asianet News TamilAsianet News Tamil

பேராசிரியையின் கண்ணீர் கதையைக் கேட்ட ராகுல்காந்தி - கட்டி அணைத்து ஆறுதல்

rahul gandhi huging treatement for teacher family
rahul gandhi huging treatement for teacher family
Author
First Published Nov 25, 2017, 3:29 PM IST


குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியை தனது அவலநிலையை கூறி கண்ணீர் விட்டதைப் பார்த்தை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அவரை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவித்தார். இது பார்த்தவர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

2 நாள் பயணம்

குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 4, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அங்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கலந்துரையாடல்

அகமதாபாத் நகரில் உள்ள தக்கோரிபாய் தேசாய் அரங்கில் ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோர் கொண்ட அமைப்பினரோடு ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விரிவுரையாளர்

இந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசி முடித்தபின், ரஞ்சனா அஸ்வதி என்ற ஒரு பேராசிரியை ‘மைக்’கில் பேசினார்.

ஓய்வு பெறும் வயதில் உள்ள அஸ்வதி கடந்த சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் முடித்து, ஒரு கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராக மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்துக்கு பணியாற்றி வருகிறார்.

பேராசிரியர் ரஞ்சனா அஸ்வதி பேசியதாவது-

ஊதியமில்லை, விடுமுறை இல்லை

குஜராத் மாநிலத்தில் என்னைப் போல் பல கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிந்றன. அவர்களின் திறமைக்கு ஏற்ற ஊதியம் தரப்படுவதில்லை, மருத்துவ விடுப்பு, ஓய்வூதியம், மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுவதில்லை.

டாக்டர் பட்டம்

நான் கடந்த 1994ம் ஆண்டு சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றேன், ஆனால், இன்னும் எனது வாழ்வு பரிதாபமான நிலையில்தான் இருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளாக நான் பகுதிநேர விரிவுரையாளராக மாதம் 12 ஆயிரம் ரூபாய்க்கு பணியாற்றி வருகிறேன்.

எங்களுக்கு மகப்பேறு விடுமுறை கூட வழங்கப்படுவதில்லை. எனது சேவையில் மிகவும் மோசமான நாட்களை எல்லாம் சந்தித்து, கடந்துவந்துவிட்டேன்.

கவுரவமான வாழ்க்கை

இப்போது, எங்களின் ஒட்டுமொத்த சேவை காலத்தையும் ரத்து செய்துவிட்டு, ரூ.40 ஆயிரம் ஊதியத்தை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மற்ற துறைகளைப் போல் எங்களுக்கும் ஓய்வு காலத்துக்கு பின் ஓய்வூதியப் பலன்கள், மதிப்புமிக்க வாழ்க்கையை எதிர்பார்க்கிறோம்.

ஆனால், இப்போது அதற்கு வழியில்லை, நம்பிக்கை இல்லை. என்ன விதமான போராட்டங்கள் செய்தோம், என்ன விதமான வலிகளை அனுபவித்தோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்(கண்ணீர் விட்டு அழுதார்).

ஓய்வூதியம்

குஜராத்தில் அடுத்து நடைபெறும் தேர்தலில் உங்களின் காங்கிரஸ்கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், என்னைப் போல் மற்ற பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் வேதனைப்படக்கூடாது. பகுதிநேர விரிவுரையாளர்ளுக்கும் பணிகாலத்துக்கு பின் ஓய்வூதியம் அளிக்க ராகுல் காந்தி உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார்.

பொறுமையாக கேட்டார்

அஸ்வதி பேச்சு முழுவதையும் மேடையில் இருந்தவாரே ராகுல் காந்தி பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். அதன்பின் ராகுல் பேசுகையில், “ சில நேரங்களில், சில கேள்விகளுக்கு உங்களால் வார்த்தைகளால் பதில் கூற முடியாது’’ எனக் கூறி மைக்கை மேஜையில் வைத்துவிட்டு கீழே அஸ்வதியை நோக்கி நடந்துவந்தார்.

கட்டி அணைத்து ஆறுதல்

நடுவரிசையில் அமர்ந்திருந்த அஸ்வதியை நோக்கிச் சென்ற ராகுல் காந்தி, அவரை கட்டித் தழுவி ஆறுதல் தெரிவித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத அரங்கில் இருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். ராகுல் காந்தியின் இந்த செயல் அனைவரின் இதயத்தையும் தொட்டுவிட்டது.

உறுதி

அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விரிவுரையாளர்களுக்கு மகப்பேறு விடுமுறை, சிறப்பான கல்வி, சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்படும். விரிவுரையாளர்களுக்கு மாறாத ஊதியமாக அரசு நிர்ணயிப்பது நியாயமில்லாதது, அதுவும் மாற்றப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios