காங்கிரஸ் வெற்றி பெற்ற 3 மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவை அக்கட்சிகளின் கூட்டணி தலைவர்கள் பலர் புறக்கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் வெற்றி பெற்ற ராஜஸ்தானில் முதல்வராக அசோக் கெல்லாட் பதவியேற்றார். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் அக்கட்சியை சேர்ந்த முதல்வர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். மத்தியப்பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. 

ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, இந்த விழாக்களில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசும் பதவியேற்பு விழாக்களில் பங்கேற்வில்லை. கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்ற விழாவில் மாயாவதி, சரத்பவார், சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் மூன்று மாநில வெற்றி அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு பெரும் எழுச்சியாக கருதப்படும் நிலையில் பலரும் பதவியேற்பு விழாவை புறக்கணித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி,  ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், சரத் யாதவ் மட்டுமே பங்கேற்றனர்.  
 
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்து பேசியது, இந்த பதவியேற்பு விழாவை திமுக தவிர பிற எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.