சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்
உட்பட பல்வேறு மதவெறி இயக்கங்களும் வன்முறையாகப் போராடிவருகின்றன. இவர்களை தடுக்க
இயலாமல் கேரள அரசு திணறிவருகிறது. 3000 பேர் வரை மாநிலம் முழுவதும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மாதவிடாய் வரும் பெண்கள் சபரிமலை கோவிலினுள் நுழைந்தால் அவர்களைத் தடுக்க தங்கள் கையை
அறுத்து ரத்தத்தை கோயிலில் தெளித்து அதன் புனிதம் கெட்டு கோவிலை மூட மக்கள் தயாராக இருப்பதாக 'ஐயப்ப தர்ம சேனா'
சமூக அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் சென்ற வாரம் கொச்சியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய அவரது பேச்சை பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சிகளும் ஆதரித்த நிலையில் கேரள காவல் 
துறை இன்று ராகுல் ஈஸ்வரை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது அபார்ட்மெண்ட்டில் வைத்து கைது செய்துள்ளது. அவர் மேல்
இ.பி.கோ. 153, மதரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் பேசுவது மற்றும் 117 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்
பட்டிருப்பதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் ஈஸ்வர், ஐயப்பன் கோவிலின் தலைமைப் பூசாரியாயிருந்த ஈஸ்வரன் நம்பூதிரியின் மகனாவார். ஏற்கனவே இந்த மாதத் 
துவக்கத்தில் ஐயப்பன் கோவில் விவகாரத்தில் ராகுல் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டிருந்தார். பாஜக தலைவர் அமித் ஷா
சபரிமலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் தொண்டர்கள் அனைவருக்கும் ஆதரவாக பா.ஜ.க தூண் போல நிற்கும் என்று
தெரிவித்துள்ளார்.