ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரமான பூரியில் பிரபலமான ஜெகன்நாதர் கோயில் அமைந்துள்ளது. பிரபலமான வைணவ தலமான ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் புகழ் வாய்ந்தது. 9 நாட்கள் நடைபெறும் 

இந்த கோயில் தேராட்ட திருவிழாவை காண்பதற்காக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் மக்கள் வருவர். ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அந்த மாநிலத்திலும், வெளிமாநிலங்களிலும் உள்ளன.

ஒடிசா சட்டப்பேரவையில், பூரி ஜெகன்நாதர் கோயில் சொத்து விவரங்கள் குறித்த கேள்விக்கு அம்மாநில சட்டத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஒடிசாவின் 30 மாவட்டங்களில் 24ல் ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமான 60,426 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் 34,206 ஏக்கர் நிலத்துக்கு கோயில் நிர்வாகத்தால் உரிமைகள் இறுதி பதிவை தயாரிக்க முடியும்.

இதுதவிர ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஜெகன்நாதர் கோயிலுக்கு சொந்தமாக மொத்தம் 395 ஏக்கர் நிலம் உள்ளது. 

மேலும் கோயிலின் பொக்கிஷ அறையில் விலை மதிக்க முடியாத ஆபரணங்களை தவிர்த்து 150 கிலோ தங்கம் உள்ளது. 1985 ஜூலை 14ல் கடைசியாக ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை திறக்கப்பட்டது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.