பஞ்சாப் மாநிலம் நபா சிறைச்சாலையை தகர்த்து காலிஸ்தான் தீவிரவாத தலைவர் உட்பட 6 பேர் கடந்த நேற்று முன்தினம் தப்பி சென்றனர். இந்த சம்பவத்தின்போது, சிறைச்சாலையில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரியவந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைச்சாலைக்குள் போலீசாரின் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல், நேற்று முன்தினம் அதிகாலையில் அதிரடியாக தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 பேரை மீட்டு சென்றன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக, சிறைத்துறை டிஜிபி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய குழுவினர், சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள், வெளியில் இருந்த சில சமூக விரோதிகளுடன் செல்போனில் வாட்ஸ்அப் மூலம் பேசிக் கொண்டதை கண்டுபிடித்தனர். மேலும், நபா சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் பலரும், செல்போன் பயன்படுத்தி, சமூக தளங்களில் பதிவு செய்வது, வெளியே கொலை, கொள்ளை சம்பவங்களுக்கு திட்டம் வகுத்தும்கொடுத்துள்ளனர். இதற்கு எந்த கட்டுப்பாடும் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை என்பது தெரியவந்தது.
குறிப்பாக சிறையில் இருந்து தப்பித்த குர்ப்ரீத் சிங் சேகான் என்ற தீவிரவாதி, நவம்பர் 23ம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில், சிறைச்சாலையில் இருந்தபடியே புகைப்படம் எடுத்து அதனை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். இதற்கு 900 லைக்குகள் கிடைத்துள்ளன.
