பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. அதேசமயம், கடந்ததேர்தலில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்க போராடுகிறது. அதேசமயம், கடந்ததேர்தலில் நுழைந்த அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சியும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கடும் போட்டியளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப்பில் மொத்தம் உள்ள 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத்தல் நாளை ஒரே கட்டமாக நடக்கிறது. 1,304(93பெண்கள்) வேட்பாளர்கள் தலைவிதியை 2.14 கோடி வாக்காளர்கள் முடிவு செய்யஉள்ளனர். மாநிலத்தில் 24 ஆயிரத்து 740 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இதில் 2013 பதற்றமானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதனால், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது, பாஜகவை ஆட்சிக்குவரவிடாமல் தடுக்கும்வகையில் காங்கிரஸ், ஆம்ஆத்மி கூட்டணி சேருமா அல்லது ஆம் ஆத்மிக்கு பெரும்பான்மை கிடைத்து ஆட்சி அமைக்குமா என்ற பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
பாஜகவுக்கு வாய்ப்பிருக்கா?
ஆனால் பஞ்சாப்பை பொறுத்தவரை பாஜக என்பது இத்தனை ஆண்டுகளாக சிரோன்மணி அகாலிதளம் கட்சியின்முதுகின் மீதுதான் சவாரி செய்து ஆட்சி அதிகாரத்தை ருசித்திருக்கிறது. பஞ்சாப்பைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 8 சதவீதத்துக்கு அதிகமாக வாக்கு வங்கி இல்லை. அதிலும் மாநிலக் கட்சிகள் மீதான சவாரிதான் சிரோண்மணி அகாலிதளத்தின் கூட்டணி ஆட்சியில் எம்எல்ஏக்களைப் பெற்றுக்கொடுத்தது.
ஆதலால், பஞ்சாப்பில் பாஜகவுக்கு பெரிதாக அடித்தளம் இல்லை. அதிலும் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உருவாக்கி, ஆறாத ரணத்தை ஏற்படுத்தியிருப்பதால், பாஜகவுக்கு மேலும் பின்னடைவு. இந்த வேளாண் சட்ட விவகாரத்தில் 30ஆண்டுகளுக்கும் மேல் கூட்டணியில் இருந்த சிரோன் மணி அகாலிதளமும் பாஜகவைவிட்டு பிரிந்து, தனித்து போட்டியிடுகிறது.

இதனால், வேறுவழியின்றி பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் மக்கள் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது. பஞ்சாப்புக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது, பாதுகாப்பு பிரச்சினையைக் காரணம் காட்டி பிரதமர் மோடி பேசியது தேர்தலில் எதிர்வினையாற்றும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். இவை எல்லாம் பாஜகவுக்கு பாதகமாக மாறுமாஎன்பது தேர்தலில் தெரியும்.
ஆம் ஆத்மி கட்சி
கடந்த 2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்முறையாகச் சந்தித்த 20 இடங்களில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி வென்றது. டெல்லியில் அசைக்க முடியாத கட்சியாகத் திகழும் ஆத்மி மீது அங்குள்ள மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான், பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மிக்கு துருப்புச்சீட்டாக மாறப் போகிறது.
டெல்லி அரசின் நிர்வாகம், மக்கள் நலப்பணிகள், இலவச அறிவிப்புகள், சுகாதாரம், கல்விக்கு கொடுத்த முக்கியத்துவம், பெண்கள் பாதுகாப்பு, வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், புதிய திட்டங்கள் போன்றவை பஞ்சாப் மக்கள் மத்தியிலும் கெஜ்ரிவால் ஆதரவைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் 65 இடங்கள்வரை ஆம்ஆத்மி வெல்லும் என்று கூறப்பட்டநிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணப்பில் 35 முதல் 40 இடங்கள்வரை கிடைக்கும் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சி மீதான அதிருப்தி, அகாலிதளம், பாஜக மீதான கோபம் ஆகியவற்றை ஆம்ஆத்மி கட்சிதான் அறுவடை செய்யப்போகிறது. கடந்த 2017ம் ஆண்டில்கூட அகாலிதளம் 17 இடங்களில்தான் வென்றது, ஆனால், அகாலிதளம் வலிமையாக இருந்த இடங்களில்கூட ஆம்ஆத்மி வென்றது அந்த கட்சியின் அதிருப்தி வாக்குகளை வென்றதைக் காட்டுகிறது.
இந்த முறை பாஜக கூட்டணி, அகாலிதளம் ஆகிய கட்சிகளைவிட ஆம் ஆத்மிக்கு நிச்சயம் இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அடுத்து யார் முதல்வராக அமர்வார் என்பதை தீர்மானிக்கும் கட்சியாகக்கூட ஆம்ஆத்மி மாறலாம். அல்லது, யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பாஜகவை ஆட்சிக்குவரவிடாமல் தடுக்கும்நோக்கில் ஆம்ஆத்மிக்கு முதல்வர் வாய்ப்பை காங்கிரஸ்கட்சிகூட தரலாம்.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க முயல்கிறது. பஞ்சாப்பில் பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட காங்கிரஸ் கட்சி 40 சதவீதத்துக்கும் மேல் வாக்குவங்கியைத் வைத்துள்ளது. தேர்தலுக்கு முந்தைய முதல்கட்ட கருத்துக்கணிக்கில் காங்கிரஸ் 20 இடங்கள் கூட வராது எனக் கூறப்பட்டநிலையில் தற்போது 50 இடங்கள்வரை பெறக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமரிந்தர் சிங் காங்கிரஸை விட்டு விலகியது சற்று பின்னவைக் கொடுத்து, வாக்குகளை பிரிக்கக்கூடும். உட்கட்சி பூசல், அடுத்த முதல்வர் யார், மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவை காங்கிரஸுக்கு தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் கருவியாக இருக்கும். இருப்பினும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையோ அல்லது கடந்த தேர்தலில் கிடைத்த இடங்களோ கிடைப்பது மிகக்கடினம்தான என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன
அகாலிதளம்-அமரிந்தர் சிங்
பஞ்சாப்பில் ஆண்ட கட்சி, பெரிய கட்சி சிரோன்மணி அகாலிதளம். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் பாஜகவுடன் நீண்டகால உறவான முறித்துக்கொண்டு பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் 13 இடங்களில் மட்டும் வென்று பெரிய சேதத்தை அகாலிதளம் சந்தித்தது.
தனது தவறுகளைத் திருத்தியதால்தான், வேளாண் சட்டங்களுக்கு உடனடியாக எதிர்ப்பை வெளிப்படுத்தி மத்திய அரசிலிருந்தும், கூட்டணியிலிருந்தும் வெளியேறியது. வேளாண்சட்டத்தில் விவசாயிகளுக்கு அகாலிதளம் ஆதரவாகஇருந்தது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும் அது வாக்காக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பணும் இல்லை என்பதால், பாஜகவுடன் இணை சேரவும் எதிர்காலத்தில் வாய்ப்புள்ளது. ஆதலால், அகாலிதளத்துக்கு மக்கள் ஆதரவு தேர்தலுக்குப்பின்புதான் தெரியும்
அமரிந்தர் சிங் மிகப்பெரிய விஷப் பரிட்சையில் இறங்கியுள்ளார். தனியாகக் கட்சி தொடங்கியபோது மட்டுமல்லாமல் பாஜக, அகாலிதளம் சன்யுக்த் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. அவருக்கு ஏற்கெனவே இருக்கும்வாக்கு வங்கியையும் மேலும் குறைக்கும். வேளாண் சட்டங்கள் பிரச்சினையின்போது பாஜகவை எதிர்த்த அமரிந்தர் சிங், இப்போது அதே கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பது தேர்தலில் முடிவில் நகைப்புக்குரிய மாறிவிடாமல் இருக்க வேண்டும்.
இது தவிர பகுஜன் சமாஜ், விவசாயிகள் அமைப்புகள் சேர்ந்த சன்யுக்த்சமாஜ் மோர்ச்சா ஆகிய கட்சியும் போட்டியிடுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாய அமைப்புகள் ஒன்று சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
வெல்வார்களாக விஐபிக்கள்
முதல்வர் சரன்சித் சன்னி, ஆம்ஆத்மி தலைவர் பகவந்த் மான், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் ஆகியோர் போட்டியில் இருக்கும் முக்கிய விஐபிக்கள்.தவிர முன்னாள் முதல்வர் ராஜிந்தர் கவுர் பாதல், பஞ்சாப் பாஜக தலைவர் அஸ்வானி சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சம்பலா ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்

போட்டி அறிவிப்புகள்
அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ஆயிரம் என்று கூறிய ஆம்ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சி ரூ.1,100 என்று வாக்குறுதியளித்துள்ளது. அகாலிதளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சிக்குவந்தால், மாதம் ரூ.2ஆயிரம் உதவித்தொகை என இலவசவாக்குறுதிகளை அள்ளிவீசியுள்ளன
இதுதவிர ஒருலட்சம் அரசுவேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என காங்கிரஸ், அகாலிதளம் தனித்தனியாக வாக்குறுதி அளித்துள்ளன. அரசு மற்றும் தனியார் துறையில் 75 சதவீதம் மாநிலஇளைஞர்களுக்கு இடஒதுக்கீடு வாக்குறுதியை அகாலிதளமும், பாஜகவும் அளித்துள்ளன
மாதந்தோறும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தருவதாக ஆம்ஆத்யும், 400 யூனிட் தருவதாக அகாலிதளம் பகுஜன் சமாஜ் கூட்டணியும் அறிவித்துள்ளன

நட்சத்திரப் பிரச்சாரம்
பிரதமர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத்சிங், ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆம்ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளது எந்த அளவுக்கு அவர்கள் கட்சிக்கு பலன் தரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்
