காஷ்மீரில் தாக்குதல் மூலம் எதிரிகள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். இதற்கு ஈடாக அவர்கள் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார். 

டெல்லியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் உரையாற்றி அவர் ராணுவத்திற்கு புல்வாமா தாக்குதலுக்கு பின் தீவிரவாதிகள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள். உரிய பதிலடி கொடுக்க பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வீரத்தின் மீதும், துணிச்சல் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் இருக்கும் சக்திகள் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார். 

அனைத்து நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவாக உள்ளன. இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளன. பல கனவுகளோடு இருந்த, தாக்குதலில் வீரமரணம் அடைந்த எமது வீரர்களின் கனவுகளை கலைய விட மாட்டோம்.  இந்திய குடிமகன் ஒவ்வொருவரின் ரத்தமும் கொதித்து போய் உள்ளது. இந்த செயலுக்கு உரிய தண்டனை கொடுக்கப்படும். 

பாகிஸ்தான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது. இனி பாகிஸ்தான் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியை சந்திக்கும். இந்தியாவின் ஸ்திரதன்மையை இது போன்ற தாக்குதல்கள் பாதிக்காது என மோடி கூறியுள்ளார்.  

எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் பொருத்துக் கொள்ளாது. மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதலில் அரசுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவோம். எந்த ஒரு சக்தியும் இந்தியாவை பிளவுப்படுத்த முடியாது என்று ராகுல் கூறியுள்ளார்.