காஷ்மீரில் 50 துணை ராணுவ வீரர்கள் உயிரை பலிவாங்கிய தீவிரவாத தாக்குதல் சம்பவம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜம்முவில் செயல்பட்டு வந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த (சிஆர்பிஎப்) 2,500 வீரர்கள், ஜம்முவில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி 78 பேருந்துகளில் நேற்று சென்று கொண்டு இருந்தனர். புல்வாமா மாவட்டத்தில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் அவந்திபோரா அருகே வீரர்களின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன.

அப்போது ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இந்த தற்கொலை படை தாக்குதலில் பேருந்தும் வெடித்து சிதறி சின்னா பின்னமானது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், பேருந்தில் இருந்து வீரர்கள் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பலியாகி விழுந்தனர். 

பலர் படுகாயங்களுடன் அலறி துடித்தனர். பல வீரர்களின் உடல் பாகங்களும், பேருந்தின் பாகங்களும் பல அடி தூரத்துக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ரத்த வெள்ளத்தில், போர்க்களம் போல் காட்சி அளித்தது.  இந்த கொடூர சம்பவம் நடந்ததும், பேருந்தின் முன்னால் சென்று கொண்டிருந்த வீரர்களும்,  பின்னால் வந்து கொண்டிருந்த வீரர்களும் ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள், அவர்களின் மீதும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் வீரர்கள் நிலை குலைந்தனர். அவர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 50 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தாக்கியவன் உள்ளூர் தீவிரவாதி

வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்துடன் வந்து தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதி, புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகபோரா பகுதியை சேர்ந்தவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவன் பெயர் அடில் அகமத். இவன் கடந்தாண்டுதான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக இதுபோன்ற கொடூர தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு, தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்களின் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக கூறியுள்ளது. இந்த தீவிரவாத தாக்குதல் நாட்டியே உலுக்கியுள்ளது.