Asianet News TamilAsianet News Tamil

புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை.. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு எதனால்..? விளக்கம் அளித்த ஆளுநர்..

மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகதான் புதுச்சேரியில் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதுள்ளது என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

Puducherry Governor Tamilisai Press Meet
Author
Tamil Nadu, First Published Jan 23, 2022, 9:19 PM IST

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குப் பிறகு கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளையொட்டி லாஸ்பேட்டையில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு துணை நிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை,"புதுச்சேரி அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது சிலை தில்லியில் நிறுவப்பட இருக்கிறது.இது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாக அமையும் என்றார்.

கொரோனா சூழலில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பதைப்போலவே புதுச்சேரியிலும் தொற்று அதிகரித்திருக்கிறது. புதுச்சேரியில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தளர்வுகளோடு கூடிய  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கொரோன தொற்று காரணமாக பிற மாநிலங்களில் முழு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதற்காகதான் புதுச்சேரியில் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

Puducherry Governor Tamilisai Press Meet

மக்கள் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. நோய்த் தொற்று அதிகம் இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பது மிகவும் ஆறுதலான செய்தி.மேலும், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே மரணம் ஏற்பட்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. 

ஜிப்மர் மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருப்பதாக அறிந்து அதிகாரிகளுடன் பேசினேன். ஜிப்மர் இயக்குனர் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து விளக்கம் அளித்தார்கள். 60 சதவீதத்துக்கும் மேலாக மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அதனால் சாதாரண அறிகுறிகளோடு வரும் நோயாளிகளை முழுமையாக கவனிக்க இயலவில்லை என்றும் தெரிவித்தனர்.

Puducherry Governor Tamilisai Press Meet

எத்தகைய சூழ்நிலையிலும் நோயாளிகள் பாதிப்பு அடையாத வகையில் மருத்துவச் சேவையைத் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவர்களும் உறுதி அளித்துள்ளனர். எனவே அவசர சிகிச்சையும் அவசியமான சிகிச்சையும் ஜிப்மர் மருத்துவமனையிலும் மற்றும் புதுவையில் உள்ள பிற மருத்துவமனைகளிலும் மறுக்கப்படாது என்று அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios