puducherry congress siege around governor office

புதுச்சேரியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் சட்டமன்ற சபாநாயகர் பரிந்துரை இல்லாமல், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி 3 எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனால், புதுச்சேரியில் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். அதில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, 3 எம்எல்ஏக்களுக்கு செய்து வைத்த பதவி பிரமாணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையில் புதுவை முதல்வர் நாராயணசாமி, தனியார் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தபோது, பதவி பிரமாணம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள். அதில், முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் என கூறினார். மேலும், அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் இன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால், புதுச்சேரியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.