உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அத்தியாவசிய தேவையாக பயன்படுவது மாத்திரை மற்றும் டானிக்குகள், இந்த நிலையில் நாளை முதல் 10 சதவிகித அளவிற்கு அத்தியாவசிய மருந்துகள் விலை அதிகரிக்கப்படவுள்ளது.இதனால் பொதுமக்களுக்கு  மாத பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது 

மருந்துகளின் விலை அதிகரிப்பு

பெட்ரோல், டீசல், என விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 5 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மருந்துகளின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பிற்கு அத்தியாவசிய தேவையாக அமைந்தது பாரசிட்டாமல் மற்றும் டோலா மாத்திரைகள் உலகம் முழுவதும் இந்த மாத்திரைகள் பல நூறு கோடிக்கு ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றது. கொரோனா பாதிப்பால் வீட்டில்தனிமைப்படுத்திக்கொண்டவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த மாத்திரைகள் அமைந்திருந்தது. இந்த நிலையில் 800க்கும் மேற்பட்ட மாத்திரைகளின் விலை உயர்த்தப்படுவதாக தேசிய மருந்து விலை நிர்ணயம் ஆணையம் அறிவித்துள்ளது.

10% அதிகரித்த மருந்துகள்

தேசிய மருந்து விலை நிர்ணயம் ஆணையம் சார்பாக மருந்துகளின் அதிகபட்ச விலை ஒவ்வொரு ஆண்டும் நிர்ணயம் செய்யப்படுகிறது. வருடந்தோறும் மருந்துகளின் விலை குறிப்பிட்ட அளவு உயர்த்ப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் 1.88 சதவிகிதம் அளவிற்கு மருந்துகளின் விலை அதிகரிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் மருந்துகளின் விலை 0.50 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. தற்போது அதிகபட்சமாக 10.70 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்படவுள்ளது. மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்து வருவதே விலை உயர்வுக்கு காரணம் என தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் 2.51சதவிகிதமாக இருந்த மொத்தவிலை பணவீக்கம் நடப்பாண்டின் பிப்ரவரியில் 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாளை முதல் (ஏப்ரல் 1) 800 மருந்துகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. குறிப்பாக கொரோனா பாதிப்பின் போது அதிகமாக பயன்படுத்தப்பட்ட மருந்துகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 2000 ரூபாய்க்கு மருந்து வாங்கியிருந்தால் அந்த மருந்தின் விலை 200 ரூபாய் அதிகரித்து 2200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வரியை குறைக்க கோரிக்கை

குறிப்பாக காய்ச்சல், இருதய நோய், புற்றுநோய், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், ரத்த சோகை எதிர்ப்பு மருந்துகள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்டும் நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ள நிலையில் தற்போது மக்களின் அத்தியாவாசிய தேவையாக உள்ள 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை அதிகரிக்கப்ட்டுள்ளது. எனவே மருந்துகளின் விலையை கட்டுப்படுத்த மருந்துகளுக்கு விதிக்கப்படும் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.