கேரள மாநிலத்தில் தேயிலை தோட்டங்கள் பல ஏக்கரில் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம், போனஸ் உள்ளிட்டவை வழங்காமல் இருந்தது.

இதனை கண்டித்து கடந்த 2015ம் ஆண்டு மூணாறில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, போனஸ் கோரி, பெண் தொழிலாளி கோமதி என்பவர் தலைமையில், பெண் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தொழிலாளர்களுக்கான சலுகைகள் கிடைத்து வருகிறது. இதையொட்டி, 'பெண்கள் உரிமை' எனும் பெயரில் புதிய அமைப்பு உருவானது.

 

போராட்டத்தில் தலைவியாக செயல்பட்ட கோமதி,  2015ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், தேவிகுளம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், மூணாறு அருகே நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய கேரள மின்துறை அமைச்சர் எம்.எம்.மணி, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழிவாக பேசினார்.

அதற்கு கண்டனம் தெரிவித்து கேரள மாநில  பா.ஜ.கவினர் இன்று மாநிலம் முழுவதும் முழுஅடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எதிர்க்கட்சியினரின் முழு அடைப்பு போராட்டத்தால், இடுக்கி வழியாக தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து வசகானங்களும் கேரள எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.