பிரதமர் மோடியின் 3D பேச்சு! சுதந்திர தின உரையை புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!
பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையை பத்ம விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள பெண், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) செங்கோட்டையின் அரண்மனையில் பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர தின உரையை பல்வேறு துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற இந்தியர்கள் பலர் பாராட்டியுள்ளனர். பத்ம விருது பெற்றவர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிக நிறுவனங்களின் தலைவர்கள், முக்கியப் பொறுப்புகளில் உள்ள பெண், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பிரதமரின் உரையைப் பாராட்டி பேசியுள்ளார்கள்.
சிறு, குறு, நிறுவனங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் அனில் பரத்வாஜ், இந்தியாவின் மக்கள்தொகை, ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை (Demography, Democracy, Diversity) ஆகிய மூன்று பரிமாணங்களை (3D) பற்றி பிரதமர் கூறிய கருத்துகளைப் பாராட்டியுள்ளார்.
அர்ஜுனா விருது பெற்ற இந்திய வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மா, ஊழலுக்கு எதிரான பிரதமரின் முழக்கத்தை ஆதரிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். தேசிய, சர்வதேச பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கனைகள் கௌரவ் ராணா, நிஹால் சிங், ஃபென்சர் ஜாஸ்மின் கவுர், கிரண், பிரியா சிங், நான்சி மல்ஹோத்ராஆகியோரும் பிரதமரின் ராஷ்ட்ர பிரதம், எப்போதும் பிரதம்' என்ற முழக்கத்தைப் பாராட்டியுள்ளனர்.
பத்மஸ்ரீ பாரத் பூஷன் தியாகி, விவசாயிகளுக்கு பிரதமர் அளித்த அங்கீகாரத்திற்கும், தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் பங்களிப்புக்கும் நன்றி தெரிவித்தார். இதேபோல், ஸ்ரீ வேத்வ்ரதா ஆர்யாவும் விவசாயிகளுக்கு முன்னேற்றத்தை கொண்டு வந்த அரசின் சமீபத்திய முயற்சிகள் பற்றிப் பேசினார்.
பிரபல நடிகை சரிதா ஜோஷி, செங்கோட்டையில் இருந்து பிரதமர் ஆற்றிய உரை, தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்களின் பங்களிப்பை எடுத்துரைத்தது என்றும் பெண்களுக்கு புதிய சக்தியை அளித்துள்ளதும் என்றும் குறிப்பிட்டார்.
சி.எல்.எஸ்.ஏ. (CLSA ) தலைவர் இந்திராணி சென் குப்தா, இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்தார். பிரதமரின் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்திற்கான அழைப்பையும் அவர் வரவேற்றார்.
பிரபல கதக் நடனக் கலைஞரான நளினி அஸ்தானா, பிரதமர், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம், இளைஞர்களுக்குச் சீர்திருத்தம் செய்யவும், மாற்றங்களை ஏற்படுத்தவும் எப்படி செயல்பட வேண்டும் என சிறந்த வழிகாட்டுதலை வழங்கினார் என்பதை எடுத்துக்காட்டினார்.
பத்மஸ்ரீ விருது பெற்றவரும், பிரபல மகப்பேறு மருத்துவருமான டாக்டர் அல்கா கிரிப்லானி, பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு முக்கியத்துவம் அளித்ததற்காக அனைத்துப் பெண்கள் சார்பாக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
பெண்களின் மேம்பாடு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசியதற்காக கலாரி கேபிடல் எம்.டி.வாணி கோலா பிரதமரை பாராட்டினார். பத்ம பூஷண் விருது பெற்றவரும், புகழ்பெற்ற பாடகியுமான கே.எஸ்.சித்ரா, பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பிரதமரின் அக்கறை மற்றும் பெண்களுக்கான புதிய அறிவிப்புகள் ஆகியவற்றைப் பாராட்டியிருக்கிறார்.
பைலட் கேப்டன் சோயா அகர்வால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பெண் வணிக விமானிகளை இந்தியாவைக் கொண்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். விமானப் போக்குவரத்துத் துறையில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் பெண்கள் வளர்ச்சி அடைந்துள்ளதாக பிரதமர் கூறியதைச் சுட்டிக்காட்டினார்.