நாட்டில் பணம் இல்லா பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகமாகச் செய்யும் மக்களுக்கு ரொக்கப்பரிசுகளை அளிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கான அறிவிப்பு, நிதி கட்டமைப்பு உருவாக்கம் வரும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. 

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில், கடந்த நவம்பர் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து மத்தியஅரசு மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற ஊக்கப்படுத்தி வருகிறது. அதற்காக பல வரிச்சலுகைகள், திட்டங்கள், பரிசுகளையும் அறிவித்து வருகிறது. 

இந்நிலையில், மக்கள் முழுமையாக டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்றும் முயற்சியாக, டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகமாக மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ரொக்கப்பரிசுகளை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, "கேஷ்பேக்" ஆபர் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தனி நிதி உருவாக்கத்தையும் உருவாக்க இ ருக்கிறது. 

நிதி அமைச்சகம், பொருளாதார விவகாரத்துறை ஆகியவற்றின் கீழ் நிதி அயோக் அமைப்பின் ஆலோசனைக்குழுத் தலைவர் ரத்தன் பி வாட்வால் தலைமையில், டிஜிட்டல் பேமெண்ட் ஊக்கப்படுத்தும் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இந்த திட்டத்தை பரிந்துரை செய்துள்ளது. 

இந்த திட்டத்தை செயல்படுத்த தனியாக நிதிகட்டமைப்பு ஒன்றையும் உருவாக்க மத்திய அரசு உருவாக்க உள்ளது. இந்த கட்டமைப்பில் உள்ளநிதி பொதுமக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்படும் திட்டங்களுக்காக செலவு செய்யப்படும். 

அதாவது, ரொக்கப்பணம் பரிமாற்றம் செய்யாமல், இ-வாலட், கிரெடிட், டெபிட் கார்டு பேமெண்ட், ஆகியவை மூலம் பரிமாற்றம் செய்யபவர்களுக்கு அவர்கள் எதிர்பாரா வகையில், ரொக்கப்பரிசுகள் அவர்களின் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும். 

இதற்கான முழுமையான அறிவிப்பு வரும் பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பட்ஜெட்டில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.