பிரியங்கா அரசியல் பிரவேச அறிவிப்பு தேசிய அளவில் தொடர்ந்து பேசு பொருளாகி வருகிறது. குறிப்பாக இந்திரா காந்தியின் சாயல் பிரியங்காவிடம் இருப்பதால், அதைச் சிலாகித்து பேசுகிறார்கள்.

புதிய தலைமுறை அரசியல்வாதிகளே பிரியங்காவிடம் உள்ள இந்திரா காந்தி ஸ்டைலைப் பற்றி பேசும்போது, பழைய தலைமுறை அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா? அவர்கள் இன்னும் கூடுதலாகவே பேசுகிறார்கள். தன் பங்குக்கு பிரியங்காவைப் பற்றி வெளிப்படையாக பல விஷயங்களைப் பேசியிருக்கிறார் 80 வயதான மூத்த அரசியல்வாதியும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா. 

“பிரியங்காவின் வருகை காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் அனுகூலமாக அமையும். ராகுலைவிட பிரியங்கா சிறப்பாகச் செயல்படுவார் என நான் நினைக்கிறேன். மக்கள் மத்தியில் அவரது தோற்றம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். பிரியங்காவின் பாட்டி இந்திரா காந்தியின் சாயல் அவரிடம் உள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நிச்சயம் ஆதாயத்தைத் தேடித் தரும். பிரியங்காவால் காங்கிரஸ் கட்சி பலன் அடைந்தால், அதிகம் மகிழ்ச்சியடையும் முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று தேவகவுடா தெரிவித்திருக்கிறார். 

இதேபோல கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருக்கும் தேவகவுடா, “எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று பாஜக கேள்வி எழுப்புகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் அதற்கான இயற்கையான தேர்வு. எங்கள் கூட்டணியில் பிரதமர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட விரும்பவில்லை. காங்கிரஸால் மட்டுமே பாஜகவுக்கு எதிரான வலுவான அணியைத் தேசத்துக்குக் காட்ட முடியும்” என்று விளக்க்கியிருக்கிறார்.