மோடியின் சக்ஸஸ் வியூகத்தை தகர்த்து எறிந்து தவிடுபொடியாக்கிட, வலுவான லேடி எதிரியாக தனது சகோதரி பிரியங்கா காந்தியை அரசியலில் களமிறக்கியுள்ளார் ராகுல். இந்த புதுமுகத்தின் வருகையானது வட இந்திய அரசியலில் பெரிய விறுவிறுப்பை கிளப்பியுள்ளது. பிரியங்காவுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் முதல் கட்ட சர்வே சொல்லி, மோடியின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

தனக்கு எதிராக ராகுல் ஏவியிருக்கும் இந்த பிரம்மாஸ்திரத்துக்கு எப்படி செக் வைக்கலாம்? என்று மோடி நினைத்துக் கொண்டிருந்த நிலையில்தான் வகையாய் சிக்கினார் வதோரா. பிரியங்காவின் கணவரான இவர், கடந்த 2005-ம் ஆண்டில் பிரிட்டன் தலைநகரான லண்டனின் பலப்பல கோடி மதிப்புடைய கட்டிடங்களை வாங்கியிருந்தார். இதற்கான நிதி ஆதாரம், இதற்கான வரி ஆகியவற்றில் முறைகேடு செய்ததாக கூறி அமலாக்கத் துறை ‘சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கை’ இவர் மீது பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை இப்போது உச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வதோராவுக்கு எதிராக இந்த வழக்கு திடீர் வேகமெடுக்க காரணமே பி.ஜே.பி.யின் காழ்ப்புணர்வுதான் என்று காங்கிரஸ் ஒரு பக்கம் கூவிக் கொண்டிருந்தாலும் கூட விடுவதில்லை மத்தியரசு. இந்த வழக்கில் கைதாவதிலிருந்து வரும் 16-ம் தேதி வரை முன் ஜாமீன் வாங்கி வைத்திருக்கிறார் வதோரா. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று விசாரணைக்கு ஆஜரானார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் வதோராவை விசாரணையில் துளைத்து எடுத்துவிட்டு, மீண்டும் விரைவில் ஆஜராக சொல்லியுள்ளது. 

அவருடன் வந்திருந்த பிரியங்கா ‘என் கணவர் மீது குற்றம் இல்லை. நான் அவருக்கு எப்போதும் துணை நிற்பேன்.’ என்றார். ஆனாலும் அவர் முகத்தில் சோகமும், கவலையும் அப்பிக் கிடந்தது. காரணம், இதே நாளான நேற்றுதான் காங்கிரஸ் கட்சியின் உத்திரபிரதேச கிழக்கு மண்டல பொறுப்பாளராக பிரியங்கா பதவியேற்றார். நேரடி அரசியலில், தனக்கு முதல் பதவி கிடைத்த முதல் நாளிலேயே இப்படி தன் கணவர் குற்றவாளியாக விசாரணையில் உட்கார வேண்டி இருக்கிறதே! எனும் கவலைதான் அது. 

மோடிக்கு எதிராக விஸ்வரூபம் எடுக்கும் தன்னை முடக்கிப் போடவே பி.ஜே.பி. இந்த வழக்கை வைத்து விளையாடுகிறது! என்பதே பிரியங்காவின் புலம்பல். ’பி.ஜே.பி. என்னதான் இந்த வழக்கை காட்டி என்னை ஒடுக்க முயன்றாலும், நான் பலமாய் போராடுவேன்.’ என்று உலகிற்கு பிரியங்கா காட்டத்தான், வதோரா விசாரணைக்கு சென்ற அதே நாளில் அவரை பதவியேற்க சொல்லி பணித்தாராம் ராகுல்.

என்னதான் அண்ணன் சொன்னதற்காக தலையசைத்துவிட்டாலும் கூட, ’ஃபர்ஸ்ட் டே’ சென்டிமெண்டில் ரொம்பவே தளர்ந்து போனார் பிரியங்கா! என்கிறார்கள். இன்னும் எவ்வளவோ இருக்குது மேடம்....