prison tour for government staffs

உத்தரப்பிரதேசத்தில் அரசு ஊழியர்கள் மத்தியில் இருக்கும் ஊழலைத் தடுக்க,பருக்காபாத் மாவட்டத்தில் ‘ஜெயில் சுற்றுலா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஊழல்

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தபின், அங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றார். அவர் மாநிலத்தில் ஊழலை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்றபோதிலும் ஊழல் குறைந்தபாடில்லை. அரசு ஊழியர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜெயில் சுற்றுலா

இதையடுத்து, பருக்காபாத் மாவட்ட கலெக்டர் ரவிந்திர குமார் அரசு ஊழியர்கள் மத்தியில் ஊழல் செய்யும் பழக்கத்தை குறைக்க ‘ஜெயில் சுற்றுலா’ எனும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதன்படி, நேற்று முன் தினம் ஏறக்குறைய 576 அரசு ஊழியர்கள் மாவட்ட சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கைதிகளுடன் உரையாடி சிறை அனுபவங்களைக் கேட்டு அறிந்தனர். அதன்பிறகாவது ஊழல் செய்யாமல் இருப்பார்கள் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

சுயபொறுப்பு

இந்த திட்டம் குறித்து கலெக்டர் ரவிந்திர குமார் கூறுகையில், “ சமீபத்தில் ஊழல் செய்து சிக்கிய 6 அரசு ஊழியர்களை இடைநீக்கம் செய்தேன். ஊழல் அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்காக ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழலைத் தடுக்க ஒரே வழி அரசு ஊழியர்கள் இடையே சுயபொறுப்பு அதிகரித்தால் மட்டுமே குறையும்.

88 ஊழியர்கள்

அதற்காகவே ஊழலைத் தடுக்கும் வகையில் ‘ஜெயில் சுற்றுலா’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது மாநிலத்தில் ஊழல் செய்து தண்டனைக்குஉள்ளான 88 அரசு ஊழியர்கள் சிறையில் வாடுகிறார்கள்.

576 ஊழியர்கள் சுற்றுலா

ஊழல் செய்து சிறைக்குச் சென்றால் என்ன விதமான தண்டனை கிடைக்கும், அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறியும் வகையில், ஜெயில் சுற்றுலாவை கொண்டு வந்தேன். இதற்காக நேற்று முன் தினம் 576 அரசு ஊழியர்களை சிறைக்கு அனுப்பிவைத்து கைதிகளுடன் பேசி, அவர்களின் அனுபவங்களை அறிய வைத்தேன்.

கைதிகளுடன் உரையாடல்

இதில் சிறையில் இருக்கும் அரசு ஊழியர்களின் அனுபவத்தை கேட்குமாறு கூறினேன்.இந்த திட்டத்தின் நோக்கமே ஊழல் செய்து சிறைக்கு சென்றால் என்ன விதமான தண்டணை இருக்கும் என்பதை அறிந்தால் அரசு ஊழியர்கள் மத்தியில்ஊழல் குறையும் என்பதற்காக கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் அரசு ஊழலை ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்காது என்பதை அறிய வேண்டும்.

ஊழல் ஒழிப்புத்துறையின் செயல்பாடும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அந்த அமைப்பை மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம்’’ எனத் தெரிவித்தார்.