டெல்லியில் எழுத்தாளர் சஹானி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பொதுவாழ்வுக்கான மதிப்பு சீரழிந்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்தார். கள்ளச் சந்தை மற்றும் ஊழல், கறுப்புப் பண மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக பொதுவாழ்வில் இருப்பவர்கள் சிலர் குரல் கொடுப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
மோசடி செய்பவர்களை வெளிப்படையாக சிலர் ஆதரித்துப் பேசுவது தனக்கு வியப்பை ஏற்படுத்துவதாகக் கூறிய பிரதமர், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையினரின் நல்வாழ்வை கருதுவோர் ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக கைகோர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். ஏழைகளுக்காகவே மத்திய அரசு செயல்படுவதாகக் கூறிய அவர், கறுப்புப் பணத்தை ஒழிப்பதில் சமரசம் கூடாது என்றார்.
இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, அப்போதைய ஆட்சியில் நடந்த படுகொலைகளில் சீக்கியர்கள் கொன்று குவிக்கப்பட்டதாகக் கூறிய மோடி, எழுத்தாளர் சஹானி போன்றவர்கள் ஏராளமான சீக்கியர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உயிரைக் காப்பாற்றியதாக தெரிவித்தார்.
