ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரஹானே, கோப்பையுடன் புகைப்படம் எடுக்க ஆஃப்கானிஸ்தான் அணியையும் அழைத்த செயலை பிரதமர் மோடி பாராட்டினார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் பேசிவருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி குறித்தும் அந்த போட்டியில் இந்திய அணியின் உயர்ந்த நடத்தை குறித்தும் பேசினார்.

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, அதன் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணியுடன் ஆடியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, கோப்பையுடன் புகைப்படம் எடுக்க ஆஃப்கானிஸ்தான் அணியையும் அழைத்தார். பின்னர் இரு அணி வீரர்களும் ஒன்றாக இணைந்து கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியை ஊக்குவிக்கும் விதமாக ரஹானே இவ்வாறு நடந்துகொண்டார். 

ரஹானேவின் செயல்பாட்டிற்கு அப்போதே பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், 45வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மற்ற அணிகள் கோப்பையை வென்றிருந்தால் என்ன செய்யும்? இந்திய வீரர்களோ ஆஃப்கானிஸ்தான் அணியையும் அழைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். இதுதான் விளையாட்டு வீரர்களின் ஸ்பிரிட். இந்திய அணியின் செயல்பாடு, உலகத்திற்கே முன்னுதாரணம் என பிரதமர் மோடி பாராட்டினார். ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை பாராட்டிய மோடி, இந்தியாவும் ஆஃப்கானிஸ்தானும் இதேபோன்று இன்னும் நிறைய ஆரோக்கியமான போட்டிகளை ஆட வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.