பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில், அடுத்த மாதம்(அக்டோபர்) பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. அக்டோபர்  - நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. 

இந்த தேர்தலை ஜனதா தள கட்சி தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்கிறது. இந்த பாஜகவும் இருப்பதால், முதல்வர் நிதிஷ் குமாரின் திட்டங்கள் மற்றும் அவரது பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்படாமல், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் சாதனைகளும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

கூட்டணி தர்மத்தை கடைபிடித்து, பீகாரில் மீண்டும் நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியை கொண்டுவருவதற்கு பிரதமர் மோடியே களமிறங்கிவிட்டார். அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தப்படவுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசு சார்பில் எந்த திட்டங்களும் அமல்படுத்தக்கூடாது என்பதால், முன்கூட்டியே பீகார் மக்களை கவரும் விதமாக ரூ.16,000 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த 10 நாட்களில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது மட்டுமல்லாது பீகார் மக்களுடன் பல்வேறு கட்ட உரையாடல்களையும் நிகழ்த்தவுள்ளார் பிரதமர் மோடி.

பீகாரில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாகவும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாகவும் பல திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்.  எல்பிஜி பைப்லைன், எல்பிஜி பாட்டில் ஆலை, நமாமி கங்கை திட்டத்தின் கீழ் கழிவுநீர் சுத்திகரிப்பு, குடிநீர் விநியோகம், புதிய ரயில்வே இணைப்புகள், ரயில்வே பாலங்கள், நெடுஞ்சாலைகள், பாலங்கள் ஆகிய பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தவுள்ளார்.