பிரதமர் மோடியின் வாக்குறுதிப்படி அடுத்த 2 ஆண்டுகளுக்குள் குடிமக்கள் அனைவருக்கும் தலா ரூ. 15 லட்சம் கிடைக்கும் என நம்புவோம் என்று, கூட்டணி் கட்சியான பாஜகவை சிவசேனா கிண்டல் செய்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் சேர்ந்து சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இருப்பினும் பல்வேறு விவகாரங்களில் பாஜகவை விமர்சிப்பதில் சிவசேனா தயக்கம் காட்டவில்லை. செல்லாத ரூபாய் நோட்டு விவகாரம், பசு குண்டர்களின் தாக்குதல் உள்ளிட்டவைகளில் பாஜகவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை சிவசேனா செய்தது. கடந்த மக்களவை தேர்தலின்போது பிரசாரம் மேற்கொண்ட மோடி, வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவோம்.

அவற்றை பிரித்து குடிமக்களின் வங்கிக் கணக்கில் தலா ரூ. 15 லட்சத்தை செலுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில், சிவசேனா பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் நேற்று கூறப்பட்டுள்ளதாவது:-

செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையாற்றினார்.

அப்போது, காஷ்மீர் பிரச்னையை துப்பாக்கி குண்டுகளாலோ அல்லது வன்முறைகளாலோ தீர்க்க முடியாது. காஷ்மீர் மக்களை அரவணைத்து செல்வதன் மூலமாகத்தான் தீர்வு காண முடியும் என்று பேசினார். ஆச்சரியம் அளிக்கும் இந்த பேச்சு குறித்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. மோடி சொன்னதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றால் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ நீக்க வேண்டும். அப்போதுதான் நாடு முழுவதும் உள்ளவர்கள் காஷ்மீருக்கு சென்று அங்குள்ள மக்களை அரவணைக்க முடியும். நம்பிக்கையின் பெயரால் அங்கு வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எச்சரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும். மக்களவை தேர்தலின்போது கருப்பு பணத்தை மீட்பேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்திருந்தார். அவ்வாறு மீட்கப்பட்ட கருப்பு பணத்தை பிரித்து, நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் தலா ரூ. 15 லட்சத்தை செலுத்துவேன் என்று கூறியிருந்தார். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மோடி இந்த வாக்குறுதியை நிறைவேற்றி விடுவார் என்று நம்புவோம்.