MODI : ஜனநாயகக் கடமையாற்றிய மோடி; சாலையில் நடந்து மக்களிடம் வாக்களிப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்திய பிரதமர்
நாடாளுமன்ற தேர்தலுக்கான 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
3ஆம் கட்ட வாக்குப்பதிவு
இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் இன்று 3 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குஜராத்தில் 25 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 10 தொகுதிகள், மத்தியப் பிரதேசத்தில் 9 தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 தொகுதிகள், பீகாரில் 5 தொகுதிகள், அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 4 தொகுதிகள், கோவா, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டையூ டாமனில் தலா 2 தொகுதிகள் என மொத்தம் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
வாக்களித்த மோடி
இதில் குஜராத்தில் பிரதமர்் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு வாக்கு உள்ளது. இதனையடுத்து குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள நிஷன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பிரதமர் மோடி குஜராத் வந்தார். இன்று காலை வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் முன்பே தனது காரில் இருந்து இறங்கியவர் சாலையில் நடந்து வந்தார். அங்கு இரு புறமும் கூடியிருந்த மக்கள் மோடியை பார்த்து உற்சாகமாக கை அசைத்தனர். மோடியும் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய மோடி
இதனையடுத்து வாக்குச்சாவடிக்கு முன்பாக சிறுமி ஒருவர் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட மோடி, வாக்குச்சாவ்டிக்குள் சென்றார். இதனையடுத்து அங்கிருந்த அரசு அதிகாரிகளிடம் தனது அடையாள அட்டையை காண்பித்தார். தொடர்ந்து விரலில் மை வைத்த பிறகு பிரதமர் மோடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.