கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவால் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நாடே துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கேரளாவில் கடந்த 2 வாரங்களாக பருவமழை வெளுத்து வாங்கியது. இதனால் 14 மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது. பலர் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன. 

இதுவரை நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு நாடே துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் கேரளாவில் வெள்ள நிலைமை குறித்து ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயனிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்தார். கேரள மக்களின் இந்த இக்கட்டான சூழ்நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

கேரள மக்களுக்கு ஒட்டுமொத்த தேசமும் துணை நிற்கும் என குடியரசுத் தலைவர் உறுதியதி்த்துள்ளார். கேரள மாநிலத்திற்காக மீட்புப் பணிகளில் மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டு வருவது திருப்தி அளிக்கிறது என்றார்.