இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவின் 13வது குடியரசுத்தலைவராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்; இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்துள்ளார்.

குடியரசுத்தலைவர் பதவிக்காலம் முடிந்த பின்னர், கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலிருந்து விலகியிருந்த பிரணாப் முகர்ஜி, இரு வாரங்களுக்கு மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைபெற்று வந்த அவருக்கு, ராணுவத்தின் ஆர்&டி மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. 

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84.