2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் பிரச்சாரம் செய்யவுள்ளதாக வெளியான தகவலால், காங்கிரஸ் கட்சிக்கு புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் உருவாகி, வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி –2 ஆகிய திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றிபெற்றது.  எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இந்த 2 படங்களும் யாருமே எதிர்பார்க்காத வசூலை வாரிக் குவித்து, இந்திய திரையுலகில் பல சாதனைகளை முறியடித்தன. இதில் நடித்ததன் மூலம் பல கோடி இளம் ரசிகர்களை பெற்றுள்ள பிரபாஸை பாஜக குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு, சிவசேனா, தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்துவிட்டதால், அந்த இடத்தை பிரபாஸ் மூலம் நிரப்ப பாஜக திட்டமிட்டதாம். நடிகர் பிரபாஸை கட்சிக்குள் கொண்டுவந்தால், அவரது ரசிகர்கள் பலரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்தில், காய் நகர்த்திய நிலையில், முடியவே முடியாது என பிரபாஸ் தரப்பு தடாலடியாக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், நடிகர் பிரபாஸ் மற்றும் வேறு சில திரையுலக நட்சத்திரங்களையும் பாஜகவுக்குள் இழுக்க திரைக்குப் பின்னால் காய் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த தகவல்கள் அனைத்துமே வதந்தி என்றும் தெரிவிக்கப்படுகிறது.அதேநேரத்தில், பிரபாஸின் உறவினரும், நடிகருமான கிருஷ்ணம் ராஜு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காக்கிநாடா தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே பாஜக சார்பில் வெற்றிபெற்ற அவர், மீண்டும் கட்சி தனக்கு சீட் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும், அப்போது அவருக்கு பிரச்சாரம் செய்ய பிரபாஸை பயன்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. இதனாலேயே பாஜகவுக்கு பிரபாஸ் பிரச்சாரம் செய்ய உள்ளதாக வதந்தி பரவியிருக்கலாம் என்றும் ஒருதரப்பு விளக்கம் அளிக்கிறது.பொங்கலுக்கு வெளியாகவுள்ள சாஹோ திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வரும் பிரபாஸ், அடுத்தடுத்த படங்களிலும் கமிட் ஆகியிருப்பதால், அவருக்கெல்லாம் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்ய நேரமிருக்குமா? இருப்பினும், தற்போதைய சூழலில் பாஜக நினைத்தால் எதையும் செய்யும் என்பதால், இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மட்டுமின்றி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது.