Pooja for new two wheeler with helmet
இரு சக்கர வாகன ஓட்டிகள் பூஜை போடுவதற்கு வாகனத்தைக் கொண்டு வரும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், ஹெல்மெட் இல்லையெனில் பூஜை நடத்தப்பட மாட்டாது எனவும் புவனேஷ்வரில் உள்ள கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு சக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை கடுமையாக பின்பற்றும் வகையில் போலீசாரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.
மேலும் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஹெல்மெட்டின் அவசியத்தை ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவில் ஒன்று வலியுறுத்தி வருகிறது.

பொதுவாக புதிதாக வாகனம் வாங்கியவுடன் ஆலயத்துக்கு சென்று வாகனத்துக்கு பூஜை செய்வது வழக்கமாகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் ஆலயங்களில் பூஜைக்காக வாகனங்கள் வரிசைகட்டி நிற்கும்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் உள்ள ஆலய நிர்வகம் ஒன்று சமீபத்தில் ஒரு அறிவிப்புப் பலகையை கோவிலில் வைத்துள்ளது. அதாவது இரு சக்கர வாகன ஓட்டிகள் பூஜை போடுவதற்கு வாகனத்தைக் கொண்டு வரும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ஹெல்மெட் இல்லையெனில் பூஜை நடத்தப்பட மாட்டாது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வந்த மாவட்ட காவல்துறை இப்போது மத ரீதியாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வந்துள்ளது. இதற்காக ஆலய நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு பூஜை போட வேண்டாம் என கேட்டுக் கொண்டது.
பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகமும் இதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. மகர சங்கராந்தியிலிருந்து ஹெல்மெட் இல்லாத வாகனங்களுக்கு பூஜை போடுவதில்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களைக் கொண்டு வந்திருந்த 20 பேருக்கு பூஜை மறுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடுமையான சட்டங்களால் நிறைவேற்ற முடியாத பல விஷயங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மூலம் ஏற்படும் என் இந்த கான்செட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர்
