புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை எனவும் புத்தாண்டு நள்ளிரவில் மதுவிற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை எனவும் புத்தாண்டு நள்ளிரவில் மதுவிற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டனர்.
ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், புதுச்சேரியில் தடை ஏதும் விதிக்கப்படவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி, கரிகாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கொரோனா ஊரடங்கு தாக்கத்தில் இருந்து மீண்டுவரும் நிலையில், அடிப்படை கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளதாகவும், ஏற்கெனவே யூனியன் பிரதேசத்தில் இருவர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதுச்சேரியில் குவிந்து வருவதால், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் எனவும் கோரியிருந்தார்.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஞானசேகர், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். இதேபோல வழக்கறிஞர் ஸ்ரீதர் என்பவரும் ஆஜராகி முறையிட்டார். முறையீடுகளை ஏற்ற நீதிபதிகள், இன்று பிற்பகல் வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையில்லை எனவும் புத்தாண்டு நள்ளிரவில் மதுவிற்பனைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ள கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் 2 தவணை தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் மட்டுமே பொது இடங்களில் செல்ல அனுமதி வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதுச்சேரியில் புத்தாண்டு நள்ளிரவில் மதுவிற்பனைக்கும் பார்களும் இயங்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 1 ஆம் அதிகாலை 1 மணி வரை மதுவிற்பனை நடைபெற கூடாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே டிசம்பர் 31 ஆம் தேதி இரவு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அனைவரும் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிமன்ற விதித்த நிபந்தனைகள் முறையாக அமல்படுத்துவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
