புதுச்சேரியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்போருக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டுக் கொண்டாட்டம் பெரியளவில் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இங்கு வரும் பயணிகளுக்கு சுற்றுலா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லட்சுமி நாராயணன் கொரோனா வழிகாட்டு விதிமுறைப்படி புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும். வரும் டிசம்பர் 31- ம் தேதி இரவு கடற்கரைச் சாலையில் சிறப்பு நிகழ்வுகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கும். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள். ஹோட்டல்களிலும் புத்தாண்டு நிகழ்வுகள் நடத்தலாம். புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த திட்டமிடும் ஹோட்டல்கள், நிறுவனங்கள் வரும் டிசம்பர் 23-ம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சுற்றுலாத்துறைக்கும் தெரிவிக்கவேண்டும் என்று கூறினார்.

மேலும் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் வரும் டிசம்பர், 30, 31 மற்றும் ஜனவரி 1-ஆம் தேதிகளில் தேசிய அளவில் புகழ் பெற்ற 45 இசைக்கழுக்கள் மூலம் இசைநிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. வரும் டிசம்பர்31-ம் தேதி மதியத்துக்கு பிறகு புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து கட்டுபாடுகள் காவல்துறையினரால் செய்யப்படும். வாகனங்கள் நிறுத்தும் இடத்திலிருந்து கடற்கரை சாலை வருவதற்கு மினி பேருந்துகள் சுற்றுலாத்துறையால் இயக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே புதுச்சேரி வரும் வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். ஹோட்டல்களில் தங்குவோரிடமும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பரிசோதித்த பிறகே அறைகள் தரப்படும். பழைய துறைமுகம், சுண்ணாம்பாறு, பாரடைஸ் கடற்கரை, சீகல்ஸ் ஆகிய இடங்களில் கலை நிகழ்வுகள் நடக்கவுள்ளன என்றும் அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.