திருமண வரவேற்பில் புதுமண ஜோடி துப்பாக்கியால் சுட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசித்திர திருமணங்கள்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக முன்னோர்கள் கூறுவார்கள், எனவே திருமணத்தை பெரும்பாலானோர் தடபுடலாக நடத்தி மகிழ்வார்கள், பல வித விசித்திரமான திருமணங்களை கேட்டிருப்போம் பார்த்திருப்போம், கடந்த மாதம் கூட புதுமண ஜோடி தங்கள் மீது தீ வைத்துக்கொண்டு வரவேற்பு நிகழ்வை கொண்டாடினர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த காட்சிகளும் சமூக வலை தளத்தில் பகிரப்பட்டது. தற்போது இதே போல் திருமண நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது மணமகன் மற்றும் மணமகள் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு ஆரவாரங்களோடு ஊர்வல காரில் ஏறி அமர்ந்துள்ளார்கள்.

திருமண நிகழ்வில் துப்பாக்கி சூடு
இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க கார் ஊர்வலமாக சென்ற நிலையில் மணமகனும், மணமகளும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கை துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி 3 முறை சுட்டனர். இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த ஒரு சிலர் ஆரவாரம் செய்த நிலையில் ஒரு சிலர் தலைதெறிக்க ஓடிவிட்டனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளத்தில் பரவியதையடுத்து போலீசார் மணமகன் மற்றும் மணமகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூடுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என மீரட் காவல் கண்ணாகணிப்பாளர் கேசவ் குமார் தெரிவித்துள்ளார்.
