தெலுங்கானா மாநில முதல்வராக தொடர்ந்து இரண்டாம் முறையாக வெற்றி பெற்றவர் சந்திரசேகர ராவ். இவரின் அதிகாரப்பூர்வ இல்லம் ஹைதராபாத்தில் இருக்கிறது. இங்கு அவர் தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முதல்வரின் இல்லத்தில் சில நாய்களும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

அதில் ஒரு நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது. மிகவும் சோர்ந்து காணப்பட்ட அந்த நாய்க்கு முதல்வர் இல்ல அதிகாரிகள் சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதற்காக தனியார் மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் உடல்நிலை மிகவும் மோசமடைந்து கடந்த 12 ம் தேதி அந்த நாய் உயிரிழந்திருக்கிறது. இதனால் முதல்வர் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.

இதையடுத்து முதல்வர் இல்ல அதிகாரிகள் சார்பாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு அந்த மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் இல்லத்தில் வளர்ந்த நாய் உடல்நிலை சரியில்லாமல் இறந்ததிற்கு, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.