police enquiry on school imprisoned kids

ஐதராபாத்தில் கல்விக் கட்டணம் செலுத்தாத பள்ளிக்குழந்தைகள் 19 மாணவ-மாணவிகளை தேர்வு எழுத தடை விதித்ததுடன் அவர்களை சிறை வைத்த பள்ளிக்கூட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறைவைப்பு

ஐதராபாத் ஹயாத்நகர் பகுதியில் சரிதா வித்யாநிகேதன் பள்ளி இருக்கிறது. நேற்று முன்தினம் இந்த பள்ளியை சேர்ந்த மாணவ - மாணவிகளில் சிலர் கல்விக் கட்டணம்செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்து உள்ளனர். 

இதனால் கட்டணம் செலுத்தாத19 மாணவ - மாணவிகளை பள்ளி அறையில் பூட்டி சிறை வைத்து உள்ளனர்.

தேர்வு எழுத தடை

பூட்டி சீல் வைக்கப்பட்ட மாணவ - மாணவிகளுக்கு 5 முதல் 14 வயதுதான் ஆகிறது. மேலும் அவர்களை தேர்வு எழுதவும் பள்ளி நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் போலீசுக்கு தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் அங்கு விரைந்தனர். தகவலின் பேரில் போலீசாரும் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடும் நடவடிக்கை

போலீசை பார்த்த பிறகு மாணவ - மாணவிகள் பூட்டி இருந்த அறை திறந்து விடப்பட்டது. 2 மணி நேரம் அவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.

மிகவும் கொடூரமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு கேட்டுள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.