அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என கூறப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. இதில், மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேறு யாரும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் வீட்டிலிருந்தே இதை கண்டு களிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அடிக்கல் நாட்டு விழா சரியாக 12.30க்கு தொடங்கி 12.40க்குள் நடைபெறும். பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார். ராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக வரும் பிரதமருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார்.

இந்நிலையில், காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக ஹனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது கொரோனா காலம் என்பதால் கைகளை கழுவிய மோடி வழிப்பாட்டுக்கு பிறகு கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். அவருடன் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இருந்தது குறிப்பிடத்தக்கது.