Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தலைமை தாங்கும் பிரதமர் மோடி!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்

PM Modi to lead consecration ceremony of Ram Temple in Ayodhya
Author
First Published Jun 15, 2023, 4:38 PM IST

உச்ச நீதிமன்ற திர்ப்பின் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், ராமர் கோயில் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. கோயில் கட்டுவதற்காக நிதி திரட்டும் பணியில் இதற்கென அமைக்கப்பட்டுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு நடைபெறும் கோயிலின் கட்டுமானப் பணிகள் வருகிற 2024ஆம் ஆண்டுதான் முழுமையாக நிறைவடையும். அதேசமயம், தற்காலிகமாக கட்டப்பட்டுள்ள கோயிலில் இருந்து ராமர், சீதா, லட்சுமணர் சிலைகள் புதிய கோயிலின் கர்பகிரகத்தில் 2023ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்படுகிறது. எனவே, கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவார் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அயோத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள உத்தரப்பிரதேச முதல்வர், அடுத்த ஆண்டு, ஸ்ரீராமர் தனது சொந்த வீட்டிற்கு வருவார் என்றும் கூறினார்.

இந்த மாத தொடக்கத்தில், ராமர் கோயில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயிலில் புதிய ராமர் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு பிரதமர் மோடி அழைக்கப்படுவார் என்று தெரிவித்திருந்தார். மேலும், கோயிலின் தரை தளம் அக்டோபர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் ராமர் கோயில் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அயோத்தில் முகாமிட்டுள்ள யோகி ஆதித்யநாத், துறவிகள் மற்றும் ராமர் கோயில் அறக்கட்டளை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, அயோத்தியின் வளர்ச்சியானது தமது அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் ஒன்று என குறிப்பிட்டார். ராமர் கோயில் கட்டுமான பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த அவர், ஹனுமங்கரிக்கும் சென்று பிரார்த்தனை செய்தார்.

“பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அயோத்தியின் ஒட்டுமொத்த மேம்பாடு அரசின் முன்னுரிமைகளில் ஒன்று. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள மக்கள் 'திவ்யா, பவ்ய, நவ்ய அயோத்தி'யைக் காண ஆர்வமாக உள்ளனர். அயோத்திக்கு வரும் ஒவ்வொரு பக்தரும், சுற்றுலாப் பயணிகளும் அமைதி, மனநிறைவோடு மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதை நாம் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதன் முக்கியத்துவம் என்ன? அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்து

ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோரையும் முதல்வர் சந்தித்தார். அயோத்தியில் மூன்றடுக்கு ராமர் கோவிலின் தரை தளம் கட்டும் பணி இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒவ்வொரு திட்டமும் முக்கியமானது. துறைகளுக்கு இடையே பரஸ்பர ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்கப்படுவது அவசியம். துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புடன், அனைத்து பணிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் தரத்துடன் முடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அயோத்தி ஆன்மீக நகரம் என்பதை வலியுறுத்திய யோகி ஆதித்யநாத், “பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இங்கு இறைச்சி மற்றும் மது அருந்துவதைத் தடை செய்ய வேண்டும்.” என்றார். அயோத்தியை 24 மணி நேரமும் குடிநீர் வசதி கொண்ட நகரமாக மாற்ற நீர் செயல் திட்டமும், நீர் இருப்பு திட்டமும் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அயோத்தி விரைவில் உலகத் தரம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் என்றும் சனாதன தர்மத்தின் மையப் புள்ளியாக இருக்கும் என்றும் அவர் அப்போது கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios