நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!
நாடு முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள 508 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் மோடி ஆகஸ்ட் 6ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார்
நாடு முழுவதும் அமிர்த பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் ரூ.24,470 கோடி மதிப்பில் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு வருகிற 6ஆம் தேதி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டவுள்ளார்.
அதிநவீன பொது போக்குவரத்து குறித்து பிரதமர் மோடி தொடர்ந்து பேசி வருகிறார். நாடு முழுவதும் உள்ள மக்களின் விருப்பமான போக்குவரத்து முறையாக ரயில்வே உள்ளதாக குறிப்பிட்ட அவர், ரயில் நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகிறார்.
அந்தவகையில், பிரதமரின் தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்யும் பொருட்டு, நாடு முழுவதும் 1309 நிலையங்களை மறுசீரமைக்க அமிர்த பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்த திட்டத்துக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடி செலவில் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. நகரின் இருபுறமும் ஒருங்கிணைக்கப்பட்டு, இந்த ரயில் நிலையங்களை நகரின் மையமாக மேம்படுத்துவதற்கான முக்கியத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது ரயில் நிலையத்தை மையமாகக் கொண்ட நகரின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் உள்ளடக்கியது.
உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் தலா 55, குஜராத் மற்றும் தெலுங்கானாவில் தலா 21, ஜார்கண்டில் 20, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் தலா 18, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்தியப் பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13, பஞ்சாபில் 22 ரயில் நிலையங்கள் என நாடு முழுவதும் மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன.
இந்த மறுசீரமைப்பானது, பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, நன்கு வடிவமைக்கப்பட்ட போக்குவரத்து சுழற்சி, ஒருங்கிணைப்பு மற்றும் பயணிகளின் வழிகாட்டுதல் உள்ளிட்டவற்றை உறுதி செய்யும். இந்த ரயில் நிலைய கட்டிடங்களின் வடிவமைப்பு உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தை போற்றும் வகையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.