Asianet News TamilAsianet News Tamil

கோவாவில் சர்வதேச விமான நிலையம்.. நாக்பூர் டூ ஷீரடி சம்ருத்தி நெடுஞ்சாலை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி நெடுஞ்சாலையின் முதல் கட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

PM Modi to inaugurate Nagpur - Mumbai Expressway and goa 2nd airport on 11th December
Author
First Published Dec 10, 2022, 3:57 PM IST

நாக்பூரையும் ஷீரடியையும் இணைக்கும் 520 கிமீ தூரத்தை உள்ளடக்கிய சம்ருத்தி மகாமார்க்கின் முதல் கட்டத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

701 கிமீ அதிவேக நெடுஞ்சாலையானது சுமார் 55,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. இந்தியாவின் மிக நீளமான விரைவுச் சாலைகளில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் அமராவதி, அவுரங்காபாத் மற்றும் நாசிக் ஆகிய முக்கிய நகர்ப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இந்த விரைவுச் சாலையானது அருகிலுள்ள 14 மாவட்டங்களின் இணைப்பை மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.

இதனால் விதர்பா, மராத்வாடா மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகள் உட்பட மாநிலத்தின் சுமார் 24 மாவட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும். சம்ருத்தி மகாமார்க் தில்லி மும்பை எக்ஸ்பிரஸ்வே, ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை மற்றும் அஜந்தா எல்லோரா குகைகள், ஷீரடி, வெருல், லோனார் போன்ற சுற்றுலா இடங்களுடன் இணைக்கப்படும் வகையில் உருவாக்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவதில் பிரதமர் மோடி அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நாளை (டிசம்பர் 11ஆம் தேதி) திறந்து வைக்கிறார். 2016 நவம்பரில் பிரதமரால் விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. இது கோவாவின் இரண்டாவது விமான நிலையமாகும். 

முதல் விமான நிலையம் டபோலிமில் அமைந்துள்ளது. மோபா விமான நிலையம், டபோலிம் விமான நிலையத்தை விட பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டபோலிம் விமான நிலையத்தின் தற்போதைய பயணிகள் கையாளும் திறன் 8.5 MPPA (ஆண்டுக்கு மில்லியன் பயணிகள்) ஆகும். மோபா விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதால், மொத்த பயணிகள் கையாளும் திறன் சுமார் 13 MPPA ஆக அதிகரிக்கும். 

மேலும், முழு விரிவாக்கத் திறனைக் கணக்கில் கொண்டால், கோவாவில் உள்ள விமான நிலையங்கள் சுமார் 10.5ல் இருந்து 43.5 MPPA ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. டபோலிம் விமான நிலையம் 15 உள்நாட்டு மற்றும் 6 சர்வதேச இடங்களுடன் நேரடி இணைப்புகளை வழங்குகிறது. மோபா விமான நிலையத்தின் மூலம், இவை 35 உள்நாட்டு மற்றும் 18 சர்வதேச இடங்களாக அதிகரிக்கும். டபோலிம் விமான நிலையத்தில் இரவு நிறுத்த வசதி இல்லாத நிலையில், மோபா விமான நிலையத்தில் இரவு நிறுத்தும் வசதியும் உள்ளது.

மேலும், டபோலிமில் சரக்கு முனையம் இல்லாத நிலையில், மோபா விமான நிலையம் 25,000 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட வசதியைக் கொண்டிருப்பதால் கோவாவுக்கு சிறந்ததொரு விமான நிலையமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 2014ல் இருந்து நாட்டில் செயல்படும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 140க்கு மேல் இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

அடுத்த 5 ஆண்டுகளில் 220 விமான நிலையங்களை மேம்படுத்தி செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமான நிலையங்களை திறந்து வைத்து அடிக்கல் நாட்டிய பிரதமர் இந்த முயற்சியை முன்னின்று வழிநடத்தினார். அத்தகைய சில நிகழ்வுகளின் பட்டியல் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

*நவம்பர் 2022 இல், அருணாச்சல பிரதேசத்தில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையமான ‘டோனி போலோ விமான நிலையம், இட்டாநகர்’ பிரதமர் திறந்து வைத்தார்.

*ஜூலை 2022 இல், பாபா பைத்யநாத் தாமுக்கு நேரடி விமான இணைப்பை வழங்கும் தியோகர் விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

*2021 நவம்பரில், உத்திரபிரதேசத்தின் கௌதம் புத்த நகர், ஜெவாரில் உள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

*அக்டோபர் 2021 இல், பிரதமர் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தைத் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios