உலக அளவில் கொரோனா தொற்று பரவலின் மொத்த எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா தொற்றின் பாதிப்பு தொடர்ந்து 2 லட்சத்தைக் கடந்து பதிவாகி வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. 

மகாராஷ்டிரா, பீகார், உத்திரபிரதேசம், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கூட நாளை முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகளை அறிவிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் பிரதமர் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.