சென்னையில் பாஜக தொண்டர் ஒருவர் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பார்க்காமல் பிரதமர் மோடியை வரவேற்கச் சென்றுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் பாஜக தொண்டர் ஒருவர் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் பார்க்காமல் பிரதமர் மோடியை வரவேற்கச் சென்றுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு வைரலாகி இருக்கிறது.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு சிறப்பு மிக்க உரையாடல். சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க கட்சித் தொண்டர்களில் ஒருவரான ஸ்ரீ அஸ்வந்த் பிஜாய் வந்திருந்தார். அவரது மனைவி இன்று இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ஆனால், அவர் குழந்தைகளை இன்னும் பார்க்கவில்லை என்று கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.
"நான் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்று சொல்லி, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆசிகளைத் தெரிவித்தேன். கட்சியில் இவரைப்போல அர்ப்பணிப்பு மிக்கவர்கள் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்" எனவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த 30 நாட்களில் 4வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் ஈரணு உலை திட்டத்தை தொடக்கி வைத்தார். பின், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
"சென்னை தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதும் மக்களைப் பார்த்து உற்சாகமாக உணர்கிறேன். இந்த நகரில் இருப்பது பெருமைக்கு உரியது. சென்னை வர்த்தகம் மற்றும் பாரம்பரியத்தின் சிறந்த மையமாக விளங்குகிறது. வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் பணியில், சென்னை மக்கள் மிக முக்கியப் பங்காற்றுவார்கள்" என நம்பிக்கை தெரிவித்தார்.
"சமீப வருடங்களில் நான் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு காரணமாக அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மாநிலத்தில் ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்த பிரதமர் மோடி, "தமிழகத்தில் ஏற்பட்ட புயல் வெள்ள பாதிப்புகளின்போது வெள்ளநீர் மேலாண்மையை திமுக அரசு சரியாக செய்யவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதை விட்டுவிட்டு, மீடியா மேனேஜ்மெண்டில் ஈடுபட்டிருந்தனர்" என்றார். திமுக அரசு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைத் தான் செய்துவருகிறது எனவும் சாடினார்.
