PM Modi meets Manmohan Singh days after accusing him of collusion with Pakistan

2001ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு 16ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.

அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கைகுலுக்கி பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். குஜராத் தேர்தல் பிரசாரத்தில் இருவரும் கடுமையாக விமர்சித்துக் கொண்ட நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

தாக்குதல்

பா.ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில் கடந்த 2001ம் ஆண்டு, டிசம்பர் 13ந்தேதிநாடாளுமன்ற வளாகத்தில் நுழைந்த 5 தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். நாட்டின் இறையான்மை மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றி கரமாக முறியடித்தனர்.

வீரமரணம்

ஆனால், தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில், டெல்லி போலீசார் 5 பேர், ஒரு பெண் பாதுகாப்பு படை வீராங்கனை, நாடாளுமன்ற காவல் பணியாளர்கள் 2 பேர், தோட்டப் பணியாளர், ஊடகத்தில் பணியாற்றும் கேமிராமேன் ஒருவர் என 10 பேர் பலியானார்கள்.

16ம் ஆண்டு அஞ்சலி



இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு 16ம் ஆண்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதியும், மாநிலங்கள் அவையின் தலைவர் எம். வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர்ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், மூத்த அரசியல்வாதிகள், எம்.பி.க்கள்கலந்து கொண்டனர்.

வார்த்தைப் போர்

குஜராத் தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, “ சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் இல்லத்தில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர், தூதர் ஆகியோருடன் காங்கிரஸ் கட்சியினரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீதுஅன்சாரி ஆகியோர் குஜராத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர். குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருக்கிறது’’ என்று குற்றம்சாட்டி இருந்தார். 



இதற்கு மன்மோகன் சிங் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். “ பொய்யான விஷயங்களை இட்டுக்கட்டி பேசாதீர்கள்’’ என்று அறிக்கைெவளியிட்டதால், இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்தது.

சந்திப்பு-வாழ்த்து

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருவரும் ஒருவொருக்கு ஒருவர் பரஸ்பரம் வாழ்த்துத் தெரிவித்தனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த பிரதமர் மோடி அவருக்கு கைகுலுக்கி, வணக்கம் தெரிவித்தார். பதிலுக்கு மன்மோகன் சிங்கும் வணக்கம் செலுத்தி பரஸ்பர மரியாதையை பகிர்ந்து கொண்டனர். 



அப்போது அங்கு வந்த ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.